ஐரோப்பியத் திரைப்பட விழா இலங்கையில் விழாவாகப் பரிணமித்து வருகின்றது. இதன் பண்பாட்டு அரசியல் உரையாடலுக்குரியது.
மட்டக்களப்பிலும் ஐரோப்பியத் திரைப்பட விழா 2015ல் ஐந்து திரைப் படங்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. காட்சியிடல்களைத் தொடர்ந்து கலந்துரையாடல்களும் இடம்பெற்றன.
இத்திரைப்பட விழாவை கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத்துறை ஏற்பாடு செய்திருந்தது. திரையிடல்கள் கல்லடி, மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் 24,25 ஒக்ரோபர்; 2015ல் இடம்பெற்றன. ஐந்து திரைப்படங்கள் இவ் விழாவில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன.
இதில் “Theory of Everything” எனும் திரைப்படத்தை முன்வைத்து இப்பதிவு இடம்பெறுகின்றது.வாழ்ந்து வருகின்ற விஞ்ஞான மேதையான ஸ்ரீவன் ஹோக்கிங், அவரது வாழ்க்கைத் துணை, அவருடன் வாழும் மனிதரையும் பற்றியதான திரைப்படம்தான் “Theory of Everything”.
அரிதானதும், மன உடைவை ஏற்படுத்தக் கூடியதுமான நோய் கலாநிதிப்பட்ட ஆய்வு மாணவனை திடீரென தாக்கிய போதும் சவால்களை எதிர்கொண்டு சாதித்த மனிதரதும் அவருக்கு துணையாக இருந்த வாழ்க்கைத்துணை, பல்கலைக்கழக சமூகம் என சாதிப்பதற்கான சூழ்நிலைமைகளை, சாதகமான வாழ்நிலைமைகளை உருவாக்கிய அழகிய உலகத்தின் கதை இது.
வெகு யதார்த்தமாக மனிதர்கள் எல்லோருக்கும் நம்பிக்கையையும் புத்துணர்ச்சியையும் தருவதான திரைப்படம். விஞ்ஞானம், மனிதம், வாழ்க்கை எனத் தொடர்புறுத்தும் திரைப்படம்.
அதிவீரதீரர்களும், தியாகச் செம்மல்களுமாக கட்டமைக்கப்படும் தமிழ்ப்பண்பாட்டுச் சூழலுக்குப் பரிச்சயமாக வேண்டிய பண்பாடு இது. ஒவ்வொரு மனிதரும் தானும் வாழ்ந்து பிறரும் வாழ வாழும் வாழ்க்கை திரைப்படத்தின் சாராம்சம்.
சமூகத்தின் குறிப்பிடத்தக்க பகுதியாக மாற்றுத் திறனாளிகள் வாழ்ந்து வரும் எமது சமூகப்பண்பாட்டு சூழலில் தனிமனிதர்கள்,குடும்பங்கள், சமூகங்களின் பொறுப்புகளும் பண்பாடு சார்ந்த விடயமாக மாறுவது தேவையாகிறது. இது சட்ட மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு ஊடாக மட்டும் அடையக் கூடிய விடயம் அல்ல என்பதும் அறியப்பட வேண்டியது.
புலமைச் சூழலில் ஆற்றல்களுக்குக் கிடைக்கும் முக்கியத்துவமும் முதன்மையும் இன்றைய இலங்கையின் உயர்கல்விச் சூழலில் மந்திர தந்திர கதைகளை நினைவூட்டுவதாகவே இருக்கும். ஆற்றல் நிறைந்த இளம் ஆளுமையை மாணவராக, நண்பராக, ஆசானாக ஆற்றுப்படுத்தும் புலமைத்துவப் பண்பாட்டை திரைப்படங்களில் இருந்து மட்டுமல்ல கடந்த காலங்களில் இருந்தும் மீட்டுவர வேண்டி இருக்கிறது.
இது மேற்கு ஐரோப்பாவும், கடந்த காலமும் புலமைத்துவ நேர்மை கொண்டவை என்பதை நிறுவுவதற்கு அல்ல. மாறாக எமது சூழலில் இப்பண்பாட்டின் பெருக்கத்திற்கும் கொண்டாட்டத்திற்குமே ஆகும்.
கருத்து வித்தியாசங்களை ஏற்றுக்கொள்ளும், நிராகரிக்கும், உரிமைகள் பண்பாடுகள் பற்றிய அறிவு; அறிவு விருத்திக்கும் சமூக வளர்ச்சிக்கும் அவசியமானவை.
மனித உறவுகள், பாலியல் உணர்வுகள், தேவைகள் என்பவற்றின் இயல்பான இருப்பும் வெளிப்பாடும் மனிதர் இலட்சியங்களுடன் மட்டுமேயான இயந்திரங்கள் அல்லது சடங்கள் அல்ல என்ற யதார்த்தமான செய்தியும் கவனத்தை கோருவதாக இருக்கிறது.
விரசத்தை விருந்தோம்பிக் கொண்டு, கற்பை புனிதமெனக் கொண்டாடிக் கொண்டு; பரத்தைமையை அதிகார பூர்வமான தொழிலாக இன்றுங்கூட ஏற்க மறுத்து இரகசிக ஏற்பாடாக வைத்துக்கொள்ளும் பண்பாட்டு சூழல் என்பது யதார்த்தத்தை பார்க்கவும், ஏற்கவும், எதிர்கொள்ளவும் திராணியற்ற உளவியல் வெளிப்பாடோ என்று யோசிக்க வைக்கின்றது.
எங்களைப் பற்றியதும் உலகம் பற்றியதுமான அறிவும் பார்வையும் எவ்வாறானதாக இருந்து வருகின்றது, எவ்வாறானதாக இயங்கி வருகின்றது இவற்றை எல்லாம் எவையெவை தீர்மானிக்கின்றன என்பதையெல்லாம் யார் சிந்திப்பது? எங்கு சிந்திப்பது? என்ற எண்ணம் தோன்றுகின்றது.
இத்திரைப்படம் ஸ்ரீபன் ஹோக்கிங்கைப் பற்றியதாக இருப்பினும் அவரது வாழ்க்கைத் துணை பற்றி பதிவு அழுத்தமானதாகவும், கேள்விகளுக்கு உரியதாகவும் இருக்கிறது. ஸ்ரீவன் ஹோக்கிங் கினது நோயின் பாரதூரம் அறிந்தும் காதலைக் கைவிடாது வாழ்க்கை துணையாக வாழ்வினை முன்னெடுத்த அவரது மனைவி அடைந்தது என்ன? மூன்று குழந்தைகளுக்கு தந்தையாக ஸ்ரீவனின் அர்ப்பணிப்பு எத்தகையதாக இருக்கிறது? ஏனெனில், பெண்கள் பற்றிய கதைகளும், காவியங்களும் மட்டுமல்ல வாழ்க்கையுமே தியாகங்கள், அர்ப்பணிப்புகள் பற்றியே கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த பின்னணியல்தான் மூன்று பிள்ளைகளின் தந்தையான ஸ்ரீபன் ஹோக்கிங்கின் அர்ப்பணிப்பு எத்தகையது என்ற கேள்வி முக்கியமானதாகின்றது. மேதமையின் பிரசித்தத்துள்ளும் அவரது உடல்சார் சிறப்புநிலை மீதான பார்வை காரணமாகவும் எழாமலே போய்விடக் கூடிய கேள்விகள் இவை.
தனிமனிதர்களின் பொறுப்புணர்ச்சி, கடமையுணர்வு, அர்ப்பணிப்பு, காதலுணர்வு என்பதான விடயங்களின் தெளிவான விளக்கங்களும் வியாக்கியானங்களும் பெறுவதற்கான தூண்டியாக இத்திரைப்படம் அமைவது கருத்திற் கொள்ளப்பட வேண்டியதாகிறது.
கலாநிதி.சி.ஜெயசங்கர்
நுண்கலைத்துறை
கிழக்குப் கல்கலைக்கழகம்



















