ஐரோப்பிய ஒன்றியத் திரைப்படவிழா 2015ன் ஒரு பகுதி 24,25.10.2015ல் கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத் துறையினரின் ஏற்பாட்டில் கல்லடி மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் அமரர் செல்லையா இராசதுரை அரங்கில் இடம்பெற்றது.
வழமைபோல இருபதுக்கும் முப்பதுக்கும் இடைப்பட்டதான திரைப்பட ஆர்வலர்களின் பங்குபற்றலுடன் ஐந்து திரைப்படங்களின் காட்சிப்படுத்தல்களும் அழமான கலந்துரையாடல்களும் இடம்பெற்றன.
இவ்விழாவில்
ஆகிய ஐந்து திரைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
திரையிடல்களின் பின்னான கலந்துரையாடல்களில் திரைப்பட விழாக்கள் மூலமாக ஐரோப்பிய ஒன்றியம் ஏற்படுத்த விளையும் தாக்கங்கள் எவையாக இருக்கும், அடையவிருக்கும் நோக்கங்கள் எவையாக இருக்கும் என்பது உரையாடலின் ஓர் அம்சமாக இருந்தது.
- 1.The Black Brothers (Switzerland-2013),
- 2.The Chair of Happiness(Italy-2013),
- 3.The Theory of Everything(UK-2013),
- 4.Morgen(Germany-2010),
- 5.We are young, we are
strong: (Romania-2014)
ஆகிய ஐந்து திரைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
திரையிடல்களின் பின்னான கலந்துரையாடல்களில் திரைப்பட விழாக்கள் மூலமாக ஐரோப்பிய ஒன்றியம் ஏற்படுத்த விளையும் தாக்கங்கள் எவையாக இருக்கும், அடையவிருக்கும் நோக்கங்கள் எவையாக இருக்கும் என்பது உரையாடலின் ஓர் அம்சமாக இருந்தது.
திரைப்பட விழாக்களுக்காகத் தெரிவுசெய்யப்பட்டு பகிர்ந்தளிக்கப்படும் திரைப்படங்களின் பண்பாட்டு அரசியல் எவ்வாறானதாக இருக்கிறது என்பது தேடலுக்கும், அறிதலுக்கும் உரியது என்பதும் உரையாடப்பட்டது. இந்தவிடயம் விரிவான ஆய்வுக்கும் உரையாலுடக்கும் உரியது. மற்றையது காட்சியிடப்பட்ட ஐந்து திரைப்படங்களூடாகவும் ;காணக்கிடைக்கின்ற ஐரோப்பிய ஒன்றியம் அல்லது அதன் நாடுகளின் உணர்வோட்டங்கள், சிந்தனையோட்டங்கள் எவ்வாறானவையாக இருக்கின்றன என்பதாகும்.
நச்சாக்கப்பட்ட நகரமயச் சூழலிலிருந்து இயற்கைச் சூழலுடன் அமைந்த கிராமங்களுக்கு மீண்டுவருதல், பொருளாதார ஈட்டத்துக்கான நாட்டத்தினால் அல்லாடி அங்கலாய்க்கும் வாழ்வைப் பொருட்படுத்தாத தன்னிறைவு வாழ்க்கை விரும்பப்படுதல் திரைப்படத்தின் சாராம்சமாக இருக்கின்றது.
21ம் நூற்றாண்டின் அபிவிருத்திக்கான பொருளாதார நிபுணர்கள் கவனத்திற் கொள்ளாத ஆனால், கவனம் கொள்ள வேண்டிய விடயம் இது. அபிவிருத்தியடைந்துவரும் நாடுகள் மீது கட்டவிழ்த்து விடப்படும் பொருளாதார நடவடிக்கைகள் அதற்கான கல்வித ;திட்டங்கள் மனிதரையும் மனிதர் வாழும் சூழலையும் சுரண்டுவதாக இருக்கின்றது.
மாற்று நடவடிக்கைகள் சாத்தியமற்றவை என்பதான மனப்பாங்குகளே கட்டமைக்கப்பட்டு வலுப்படுத்தப்படுகின்றன. மீண்டும் வருவதற்கான அல்லது மீண்டு வாழ்வதற்கான இயற்கையுடன் ஒத்திசைந்தவையாக ஊர்கள் எந்தளவிற்கு விட்டுவைக்கப்படுகின்றன என்பதும் முக்கியமான கேள்வியாகும்.
தடைகள் அற்ற எல்லைகள் அற்ற பொருளாதாரக் கொள்கைகள் கொண்டாட்டங்களுடன் திணிக்கப்படும் சூழ்நிலையில் உழைப்பைத்தேடி உயிரைப் பணயம் வைக்கும் மனிதப் பயணங்களில் எதிர்கொள்ளப்படும் கடுமையானதும் மனிதத் தன்மை அற்றதுமான எல்லைக் காவல் நடைமுறைகள் கேள்விகளாக எழுந்து அச்சுறுத்துகின்றன.
ஆயினும் வாழ்வின் ஆக்கபூர்வமான பக்கங்களூடாக முன்னெடுக்கப்படும் வாழ்வின் நகர்வுகள் திரைப்படங்கள் தரும் படிப்பினைகளாக அமைகின்றன. வில்லத்தனமும்,காடைத்தனமும்,வக்கிரமும,; விகாரமும் வெளிப்படுத்தும் பெரியதிரை, சின்னத்திரை அழகியல் அனுபவப் பண்பாட்டில் இது வித்தியாசமானது. ஆறுதல் தருவது. மனிதத்தின் அழகினையும் மனிதர் வாழும் சூழலின் வளத்தினையும் உணரவைப்பது, புரியவைப்பது. தமிழ்கூறும் நல்லுலகின் அழகியற் பண்பாட்டு விருத்தியில் அதிககவனம் கொள்ளப்பட வேண்டிய விடயமாக இது காணப்படுக்கிறது.
பார்க்கும் போது வெகு சாதாரணமாகத் தென்பட்டு நினைவுகளில் வரும்பொழுதுகளில் புதுப்புது அர்த்தங்களுடன் வரும் காட்சியாக்கங்கள் கற்றலுக்கு உரியவையாக இருக்கின்றன.
பொருளற்றவர், குரலற்றவராயின் தோலின் நிறம் எதுவெனினும் அவர்தம் பாடுகள்; வேறுபாடுகள் அற்றவை. நிலக்காட்சிகள், தரைத்தோற்றங்கள், காலநிலைகள் வேறுபாடுகள் கொண்டவை ஆயினும் பொருளற்ற, குரலற்ற மனிதரது வாழிடங்களும் வாழ்முறைகளும் வேறானவை அல்ல என்பதை விழாவில் காட்சிப்படுத்தப்பட்ட திரைப்படங்கள் பகிர்ந்துகொள்கின்றன.
இடம்பெயர்ந்து வந்தவர்களுக்கும் ஏலவே இருப்பவர்களுக்குமான முரண்பாடுகள், மோதல்கள் கூர்ந்தகவனிப்பிற்கு உரியவையாக வேண்டும்.
ஏனெனில் மக்களை எப்பொழுதும் மந்தை சாய்த்தலூடாக வேரற்றவர்கள் ஆக்குவதும் மனிதர்களுக்கிடையே முரண்பாடுகள், மோதல்களை உருவாக்குவதன் உடாக அவர்களது உற்பத்தித் திறனை மங்கவைப்பதும், பொருளாதாரரீதியாக தங்கிவாழவைப்பதும், குறைகூலித் தொழிலாளர்களாகக் காலத்திற்குக் காலம் வெவ்வேறுபெயர்களில் வெவ்வேறு வேதனங்களில் வைத்திருப்பதற்குமான அரசியல் செயன்முறை இதுவெனக் குறிப்பிடுவது தவறென்று தட்டிக்கழித்துவிட முடியாது.
ஏனெனில் உலகின் மிகக் குறுகிய ஒருதொகை மனிதர் உலகின் வளங்களையும் மனிதர் உட்பட்டஅதில் வாழ் உயிரினங்களையும் தங்களின் பொருளாதார ஈட்டங்களுக்காகவே கட்டுப்படுத்தி வைத்திருக்க விளைகின்றனர். உலகைத் தங்களிற்கான ஆய்வு கூடமாகவும் தொழிற்கூடமாகவும் மாற்றவே முனைகின்றனர்.
நீதி நியமங்களூடாகச் செய்வதாகக் காட்டிக் கொள்ளும் வகையில் நீதி நியமங்களை வகுத்துக் கொள்பவர்களாக அவர்களே விளங்குகின்றனர் அல்லது முகவர் வழி இயங்குகின்றனர்.
இத்தகைய சூழலில்தான் மனிதர்கள் தங்கள் தங்கள் சூழலில் வாழமுடியாதவர்களாக போராலும் பொருளாதார நடவடிக்கைகளாலும் இடம்பெயர்க்கப்படுபவர்களாக ஒவ்வொரு சூழலிலும் ஒவ்வொருவகையில் மற்றவர்கள் மீது வெறுப்பேற்றப்பட்டவர்களாக வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பதன் அரசியல் வெளிப்படுத்தப்பட வேண்டியதாக இருக்கின்றது.
காட்சிப்படுத்தப்பட்ட ஐந்து திரைப்படங்கள் எழுப்பிய சிந்தனையோட்டங்கள் சில மேற்கண்டவாறு அமைகின்றன. இவை தொட்டு தொடர்ந்துஉரையாடுவதும் செயற்படுவதும் மனிதப் பொறுப்பாகின்றது.
கலாநிதி சி.ஜெயசங்கர்
நுண்கலைத்துறை
கலைபண்பாட்டுப் பீடம்
கிழக்குப்பல்கலைக்கழகம்

















