முதலமைச்சர் நஸீர் அஹமதின் காலத்தில் கிழக்கு மாகாணம் அபிவிருத்தி காணும் - மா.உ இராஜேஸ்வரன்

இனப் பாகுபாடற்ற முறையில் சகல இன மக்களும் நன்மையடையக் கூடிய வகையில் மக்களுக்கு நன்மையளிக்கும் திட்டங்களை மேற்கொண்டு வரும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அகமதின் காலத்தில் கிழக்கு மாகாணம் பாரிய முன்னேற்றம் காணும் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் குறிப்பிட்டார். 

கிழக்கு மாகாண சமூக சேவை திணைக்களத்தினால் தெரிவு செய்யப்பட்ட பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்வு கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதெச செயலாளர் கே.லவநாதன் தலைமையில் நடைபெற்றது. அதன்போது அவர் மேற்கண்டவாறு கூறினார். 

அவர் மேலும் பேசுகையில்,
மக்கள் அளித்த ஆணையின் மூலம் கிழக்கு மாகாண சபை உறுப்பினராக தெரிவான நான் எமது மக்களின் காலடிக்குச் சென்று செயலாற்ற வேண்டியது எனது தலையாய கடமை. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகள் மக்களை சந்திக்க முடியாத அளவுக்கு பல கட்டுப்பாடுகள் இருந்தன. அந்த தடைகளை மக்கள் இவ்வாண்டு எட்டாம் திகதி உடைத்தெறிந்து விட்டனர். 

நாட்டிலுள்ள மாகாண சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வரவு செலவுத்திட்ட நிதி மாகாணத்திற்கு மாகாணம் வேறுபட்ட தொகையாக வழங்கப்பட்டு வருகின்றது. இதனை புதிய ஆட்சியாளர்கள் சமத்துவமாக வழங்கியுள்ளதாக அறிகின்றோம். அவ்வாறு நிதியீட்டம் கிடைக்கும் பட்சத்தில் எமது மக்களுக்கான சேவை மேலும் அதிகரிக்கும். அரசியலில் உள்ள நாம் அரச உயர் அதிகாரிகளைப் பகைத்துக் கொண்டு அரசியல் செய்ய முற்படுவது எமது அறியாமையாகும். எவராவது தவறு செய்தால் அவர்களை அணுகி தவறுகளை சுட்டிக்காட்டி பிரச்சினைகள் வராமல் பார்ப்பதே அழகு.

கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் மாகாண அமைச்சர்கள், அவர்களின் செயலாளர்கள், உயர் அதிகாரிகளை பல தடவை சந்தித்து அவர்களுடன் நட்புறவாடி எமது மக்களுக்கான பங்கை பெற்று வந்து பகிர்ந்தளிப்பதே எனது கடமையாகும். அந்த கடமையில் ஒன்றே இன்றைய நிகழ்வு. எனது இறுதி மூச்சுவரை அம்பாறை மாவட்டத்திலுள்ள 52 தமிழ் கிராமங்களின் அபிவிருத்தியில் அக்கறை கொண்டு தமிழ்த் தேசியக் கொள்கையுடன் உழைப்பேன் என்றார்.

இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏகாம்பரம், விஜயன் மற்றும் கமலதாசன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.