(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரி சங்கத்தினரின் நிருவாகசபை கூட்டத்திற்கு இணங்க மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரி சங்கத்தினர் கிழக்கு முதலமைச்சரை அவரது ஏறாவூர் அலுவலகத்தில் வைத்து சந்திப்பொன்றை கடந்த 03ம் திகதி நடத்தியுள்ளனர்.
இச்சந்திப்பில் ஒக்டோபர் மாதம் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்ட ஆசிரியர் நியமனம் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் போட்டிப்பரீட்சையில் பாதிக்கப்பட்ட பட்டதாரிகளினுடைய நியமனம் மற்றும் ஏனைய திணைக்களங்களில் உள்ள வெற்றிடங்கள் பற்றிய பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் கிழக்கு மாகாணத்தில் உள்ள ஆசிரிய வெற்றிடங்கள் ஏனைய திணைக்களங்களில் உள்ள வெற்றிடங்கள் என்பவற்றை சேகரித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் மத்திய அரசு இதற்குரிய அனுமதியை வழங்கும் பட்சத்தில் அந்நியமனத்தை வழங்க நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.
அத்துடன் அந்நியமனம் தொடர்பிலான கால எல்லையை வரையறுத்து கூறமுடியாது எனவும் குறிப்பிட்டார். அத்துடன் பாதிக்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவி தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் அது தொடர்பில் ஆளுனருடன் பல தடைவ கலந்துரையாடியதாகவும் இதற்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.
இச்சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரி சங்க தலைவர் உ.உதயவேந்தன் பிரச்சினைக்கு சரியான தீர்வை தரவில்லை என விசனம் தெரிவித்தனர் அத்துடன் இவ்விடயம் தொடர்பில் எதிர்காலத்தில் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்து பட்டதாரிகளுடன் கலந்து ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.













