கிழக்குப் பல்கலைக் கழகத்திற்கு நல்ல தலைமைத்துவம் கிடைக்க மட்டுமக்களே விழிப்படையுங்கள்

மட்டக்களப்பிற்குக் கிடைத்த மகத்தான சொத்து கிழக்குப் பல்கலைக்கழகம். ஆனால் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் துர்பாக்கியம் யாதெனில் பொருத்தமான தலைமைத்துவம் அதாவது உபவேந்தர் கிடைக்கப் பெறாமை.

கடந்த 08 மாதங்களாக தகுதி வாய்ந்த அதிகாரியின் வினைத்திறன் மிக்க நிருவாகத் தலைமையில்; கடந்த பலவருடங்களாக தீர்க்கப்படாது கிடப்பில் கிடந்த பல்வேறு விடயங்கள் மற்றும் முரண்பாடுகளுக்கு பொருத்தமான தீர்வுகள் காணப்பட்டு சீரான பாதையில் சென்றுகொண்டிருக்கின்ற வேளையில்  பல்கலைக்கழகமானது அதன் கட்டமைப்புக்கு இயைவாக ஒரு புதிய உப-வேந்தர் தெரிவிற்காக விண்ணப்பங்களை கோரியுள்ளது.  கடந்த கால தவறுகளையும் செயற்றிறனற்ற நடவடிக்கையையும் மீண்டும் மீண்டும் பேசி கிளறி காலந்தள்ளாமல் பொருத்தமானதொரு தலைமைத்துவத்துக்காக கிழக்கு மக்கள் குறிப்பாக மடடக்களப்பு மக்கள் அடுத்த பல்கலைக்கழக உபவேந்தர் தெரிவில் கூடிய கவனம் செலுத்தவேண்டியது   காலத்தின் கட்டாயமாகும்.

தற்போதைய தகுதிவாய்ந்த அதிகாரி தனது முன் அனுபவம், துணிவு, ஆளுமை மூலம் இப் பல்கலைக்கழகத்தின் வீழ்ச்சிப்போக்கிற்கான காரணத்தையும் அதனை நிமிரவைக்க என்னதேவையென்பதையும் புரிந்து நல்லதொரு சேவையை புரிந்திருக்கிறார். இனிவரும் எந்த உபவேந்தரும் நிருவாக இயந்திரத்தை செவ்வனே ஓட்டிச்செல்லும் வகையில் நிருவாக ஒழுங்கமைப்பை சீரமைப்பு செய்திருப்பது பாராட்டத்தக்கதே.

எம் மக்களின் ஒரே சொத்தான இக்கல்வி நிறுவனத்தை இனி ஓட்டிச்செல்லும் திறமைமிக்க  கல்வித் தகைமையும் நேர்மையும் ஆய்வுசார் அனுபவமும் ஆற்றலும் விலைபோகாத் தன்மையும் துணிவும் மிக்க ஒரு கல்விமான் தேவையாக இருக்கிறதை ஒவ்வொரு தனிநபரும் மாணவர்களும் பொதுமக்களும் அரசியல்வாதிகளும் சிந்தித்துச் செயல்படும் காலமிது. எமக்கொரு மோசமான வரலாறுண்டு முன்கதவால் மாலைபோட்டு வரவேற்று பின்கதவால் துரத்திவிடுவது,. தவறுகள் விடுபவனை தட்டிக்கேட்டு  அவ்வப்போது திருத்தாமல் தவறுக்குமேல் தவறுசெய்யவிட்டுவிட்டு கடைசியில் கவலையே இல்லாமல் கலைத்து துரத்திவிடுவது. இதன் பின்விளைவுகள் பற்றி யாருமே சிந்திப்பது கிடையாது. இவ்வாறான தூரநோக்கற்ற, சுயநல நோக்கின் விளைவு அதிக முறை தகுதிவாய்ந்த அதிகாரிகளின் ஆளுகையைப் பெற்றுக்கொண்ட இலங்கைப் பல்கலைக்கழகமாக கிழக்குப் பல்கலைக்கழகம் பொருத்தமில்லாச் சாதனையினை தம்வசப்படுத்தியுள்ளதேயாகும். மேலும், எமது பல்கலைக்கழகத்தின் பாகமாகவுள்ள திருமலை வளாகத்தை தருணம் பார்த்துக் கைப்பபற்றிக்கொள்ள  பேரினம் அதனையும் ஒரு பேரினவாத தகுதிவாய்ந்த அதிகாரியின் கீழ் திட்டமிட்டுக் கொண்டு வரப்பட்டிருப்பதையும்  நம் சமூகம் உணர்ந்தும் உணராமலிருப்பது கவலைக்கிடமே.

இந்நிலை  நீடித்தால் இப்பல்கலைக்கழகம் நாளடைவில் காணாமல் போய்விடும். இப் பல்கலைக்கழகம் சமுகத்துக்கு சேவை செய்யும் வகையில் சமுகத்தின் கண்கள் அதன்மீது கொண்டிருக்கும் விழிப்புணர்வு அதகரிக்கவேண்டும். உபவேந்தர் தெரிவின் பேரிலும் பேரவை உறுப்பினர் தெரிவிலும் அக்கறை கொள்ளவேண்டும.; அதேபோல் கல்வியாளர்கள் பல்கலைக்கழக பீடங்களின் தலைவர்கள் தெரிவில் பல்கலைக்கழக துறைசார் தலைவர்கள்  தெரிவில் நியாயத்தன்மையும் பொறுப்புணர்வும் கொண்டவர்களுக்கு வழங்கப்படுவதில் கவனம் செலுத்தவேண்டும். வெறுமனே தங்கள் பதவியுயர்வுக்கு புள்ளி சேர்ப்பவர்களையும் நியமிப்பவர்க்கு கூஜா தூக்குபவர்களையும் தெரிவு செய்வதை தவிர்க்கவேண்டும். உண்மையில் கல்வியை தகுதியாய்க்கொண்டு கல்விசார் நடவடிக்கைகளை மேம்மடுத்தும் அறிவும் ஆற்றலும் திறமையும் கொண்டவர்களும் பேரவை மூதவை பீடாதிபதி துறைத்தலைவர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டாலேயே நிறுவனத்தின் தலைவராகும் உபவேந்தருக்கு பக்கபலமாக இருக்கமுடியும்.

எனவே இம்முறையும் இப் பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக போட்டியிட பலரும் முன்வருவர்.  அதில் சிலர் பதவி மோகம், சிலர் தங்கள் இலட்சியம், சிலர் மற்றவர் உந்துவிப்பு, சிலர் பின்புலச் செல்வாக்கு, சிலர் தமாசாக,  சிலர் வழமையாக, சிலர் உண்மைப்பற்று கொண்டோராக இருப்பர். இது அவர்களின் சனநாயக உரிமை. ஆனால் தவறானவர்களை தெரிவுசெய்ய கிழக்குசமுகம் இனிமேலும் இடம்கொடுக்கக் கூடாது. போட்டிபோடப்போகிறவர்களும் தங்களைத்தாங்களே சுயபரிசோதனை செய்துகொள்ள அன்பாக வேண்டுகிறோம். அதேபோல சிபாரிசுக்காக நாடிவரும் எல்லா போட்டியாளரையும் சமூக பார்வையில் நோக்கி சொந்தக்காரன் ஊரவன் நம்மவன் எனப்பார்க்காது சரியானவரை பதவிக்கொண்டுவர தங்கள் பங்களிப்பை தமிழ் அரசியல்வாதிகள் முனைவது சாலப்பொருத்தமாகும். புலம்பெயர்ந்து வாழும் எம் சார் சமுக கல்வியாளர்களும் இதில் கூடிய கவனம் எடுக்கவேண்டும். இம்முறையும் நாம் தவறுவிடாதிருக்க ஜாக்கிரைதையாக இருப்போம்.

மட்டூர் மைந்தன்.