ஆராய்ச்சித் துறை வளர்ச்சியில் இலக்கிய மீளாய்வின் வகிபங்கும் தகவல்வளத் தரவுத்தளங்களும் - துரையப்பா பிரதீபன்

ஆராய்ச்சித் துறையில் பிரதான அங்கமாக விளங்குவது இலக்கிய மீளாய்வு. ஆராய்ச்சிக்கென ஒதுக்கபட்டுள்ள காலப்பகுதியில் கூடுதலான நேரத்தை ஆய்வாளர்கள் இலக்கிய மீளாய்வில் செலவுசெய்கின்றனர். அந்த நேரத்தை மீதப்படுத்தி செயற்திறன் மிக்கதாக மாற்றியமைப்பதில் தகவல்வளத் தரவுத்தளங்கள் பாரிய பங்கினை வழங்குகின்றன. இலக்கிய மீளாய்விற்காக ஆவணங்களைத் தேடுதல் மிகப்பெரிய நேரவிரயத்தை ஆய்வாளருக்கு ஏற்படுத்துகின்றது. எனினும் தரவுத்தளங்களின் வருகை இதற்கான தீர்வினை ஓரளவிற்கு வழங்குகின்றது. இந்தத் தரவுத்தளங்கள் ஆவணங்களின் இருப்பிடமாக விளங்குகின்ற அதேவேளை குறித்த ஆவணத்தை நோக்கி வழிப்படுத்துகின்ற சாதனமாகவும் தனது சேவையைச் செய்கிறது. 

ஆய்வாளருக்குக் கிடைக்கும் தகவல்களின் அளவைப் பொறுத்து இலக்கிய மீளாய்வில் ஆய்வாளர் திருப்தி அடைகின்றார். பண்டைய காலத்தில் இலக்கிய மீளாய்வுகளின்போது ஆய்வாளர்கள் பல்வேறுபட்ட இன்னல்களை அனுபவித்தனர். இலக்கிய மீளாய்வுகளை மேற்கொள்வதற்காக பல மைல் தூரம் நடந்து பல கஸ்டங்களையும் வேதனையினையும் அனுபவித்து ஆய்வில் ஈடுபட்டனர். சில வேளைகளில் தேடிய விடயங்கள் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பியும் உள்ளனர். ஆனால் இன்று தகவல் வளங்கள் இணையம் மூலமான தரவுத்தளங்கள் மூலம் தங்கள் இருப்பிடம் தேடி வந்துள்ளன. அதனால் இலக்கிய மீளாய்வானது ஆய்வாளர்களுக்கு மிகமிக எளிதாகிவிட்டது. 

அரிதாகக் கிடைக்கக் கூடிய, அழிந்து கொண்டிருக்கின்ற தகவல் பொக்கிஷங்களை எண்ணிமப்படுத்தி பாதுகாக்கின்ற செயல்திட்டங்கள் உலகளாவிய ரீதியில் பெரும் செல்வாக்கைப் பெற்றுள்ளன. ஆய்வாளர் தனக்குத் தேவைப்படுகின்ற விடயங்கள் மற்றும் ஆவணங்கள் எந்த நாட்டில் அல்லது எங்கு இருக்கிறதென்பதை அறிவதற்கு ஆவணப் பட்டியலாக்கத் தரவுத்தளங்கள் பயன்படுகின்றன. மேலும் எண்ணிமப்படுத்தப்படுகின்ற அறிவுப் பொக்கிஷங்கள் தரவுத்தளங்களுடாக ஆய்வாளர்களின் ஆய்வுப்பசியைப் போக்குகின்றன. இன்று லட்சக் கணக்கான ஆவணங்களை பல்வேறுபட்ட மொழிகளிலும் பயன்படுத்தக்கூடிய தன்மையை தரவுத்தளங்கள் ஏற்படுத்தியுள்ளன. அதிகமான தகவல்களைத் திரட்டி அதிலிருந்து தேவையானதை வடித்தெடுத்துச் செய்யும்; ஆய்வானது தரம்மிக்கதாக அமையும். 

ஆய்வாளரின் பிரதான அங்கமே இலக்கிய மீளாய்வுதான். ஆய்வு எனும் பாதையில் பயணிக்கத் தொடங்கும் ஆய்வாளருக்கு இலக்கிய மீளாய்வு சிறந்ததோர் வழிகாட்டியாக ஆய்வாளரின் பயணப் பாதையினை சீர்ப்படுத்திக் கொடுக்கின்றது. இலக்கிய மீளாய்வின் மீது ஆய்வாளர் செலுத்துகின்ற ஆர்வம் ஆய்வின் போக்கினைத் தீர்மானிக்கின்றது. தகவல் யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் காய்தல் உவத்தல் அகற்றி  எதையும் ஏன்? எதற்கு? எப்படி? எனும் வினாக்களை எழுப்பி விடைகாண வேண்டும். இந்த விடைகளை கண்டறிவதற்கு வழியைக் காட்டுவது இலக்கிய மீளாய்வாகும். ஒருமுறை தேடுதலில் கிடைக்கும் விடை மறுமுறை தேடும்போது கிடைப்பதில்லை. ஒவ்வொருவரும் உரிய கண்ணோட்டத்தில் தேடும்போது ஒவ்வொரு விதத்தில் விடை கிடைக்கும். சரியான போக்கினைத் தீர்மானிக்கும் வல்லமை இலக்கிய மீளாய்வின்போது கிடைக்கும். ஆய்வின் நோக்கினை சரியான பாதையில் கொண்டுசெல்வதற்கு இலக்கிய மீளாய்வில் ஆய்வாளர் தன்னிறைவு பெற்றிருத்தல் அவசியம். இலக்கிய மீளாய்வினை மேற்கொள்ளாமல் தாங்கள் நினைத்த விடயத்திலிருந்தே ஆய்வுகளைத் தொடங்குபவர்களும் உளர். இது தப்பான முன்னுதாரணமாக ஆய்வியலில் நோக்கப்படும். மேலும் கருத்தியலாளர்கள் மத்தியில் முரண்பாட்டு நிலைகளை தோற்றுவிப்பதற்கான சூழ்நிலைகளை உருவாக்கும். இலக்கிய மீளாய்வு இல்லாது ஆய்வினைத் தொடங்குகின்ற ஆய்வாளர் கிணற்றுத் தவளையாய் இருந்துகொண்டு ஆய்வினை முன்னெடுப்பவராக பார்க்கப்படுகிறார். ஏனெனில் ஆய்வினை முடித்து தனது கருத்தியல்களை முன்வைக்கும்போது வெளியுலகிலிருந்து வருகின்ற சவால்கள் மற்றும் கேள்விகளை சமாளிக்க முடியாத துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்படுவார். எனவே, ஆய்வாளர் ஒருவர் ஆய்வுப் பிரச்சினை ஒன்றினை முன்வைத்து ஆய்வினைத் தொடங்கும்போது இலக்கிய மீளாய்வே அவரது முதலாவது செயற்பாடாக இருத்தல் வேண்டும். அதற்கான காரணங்களாக பலவற்றைக் கூறலாம். 

1.ஒரு ஆய்வினைத் தொடங்குகின்றபோது குறித்த ஆய்வு வேறு யாராலும் இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்டுள்ளதா? என்பதை அறிதல் ஆய்வாளரின் ஒழுக்கவியல்சார் கடமையும் ஆய்வின் முதற்படியுமாகும். இதன் மூலம் குறித்த ஆய்வாளர் தான் மேற்கொள்ள இருக்கும் ஆய்வு முன்னர் யாராலும் மேற்கொள்ளப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு தனது ஆய்வுக்கான கருப்பொருளை இறுதிப்படுத்துகின்றார். மேலும் குறித்த ஆய்வு முடிவுகள் சார்பாக உரிமைகோரும் தகுதியையும் பெறுகின்றார். 

2.ஆய்வாளர் தான் சொல்ல விளையும்  கருத்தியல்கள் மற்றும் ஆய்வு முடிவுகளை தனது ஆய்வில் முன்வைக்கும்போது பொருத்தமான சான்றுகள் மூலம் அவை நியாயப்படுத்தப்படல் வேண்டும். குறித்த கருத்தியல் பற்றி சார்பாகவும் எதிராகவும் வேறு ஆய்வாளர்களால் முன்வைக்கப்பட்ட ஆய்வு முடிவுகளை தனது ஆய்வின் கருத்தியல்களை வலுப்பெறச் செய்வதற்குப் பயன்படுத்துதல்  ஆய்வியலில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதில் மேற்கோள்கள் பிரதான இடத்தினைப் பெறுகின்றன. பொருத்தமான மேற்கோள்களை தெரிவுசெய்வதற்கு ஆழமான இலக்கிய மீளாய்வு அவசியம்.

3.ஆய்வாளர்கள் தங்களது ஆய்வுகளை வலுப்படுத்துவதற்கும,; நியாயப்படுத்துவதற்கும் வேறு ஆய்வாளர்களால் முன்வைக்கப்பட்ட ஆய்வு முடிவுகளை தழுவி தங்கள் ஆய்வில் பிரயோகப்படுத்துதல் ஆய்வியல் துறையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம். இவ்வாறான தழுவல்களை மேற்கொள்வதற்கு இலக்கிய மீளாய்வே அடிப்படை. எனினும் தளுவல்களை மேற்கொள்ளும்போது ஆய்வியல்சார் ஒழுக்கநெறிகள் பின்பற்றப்படுவதை ஆய்வாளர் உறுதிப்படுத்திக்கொள்ளல் வேண்டும்.

4.குறித்த நாட்டில் ஆய்வினை மேற்கொள்ளும் ஆய்வாளர் தான் முன்னெடுத்துள்ள ஆய்வுப் பிரச்சினையோடு தொடர்பாக வேறு நாடுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்பதை அறிவதற்கு இலக்கிய மீளாய்வு உதவுகின்றது. 

5.ஏற்கனவே வெளிவந்த ஆய்வுகளில் முன்வைக்கப்பட்ட கொள்கைகளை மறுதலித்தல் மற்றும் பொய்பித்தல்களுக்கு இலக்கிய மீளாய்வே ஆய்வாளருக்கு பிரதானமாக அமைகின்றது.

6.முற்றுப்பெறாத மற்றும் தொடரப்படவேண்டிய ஆய்வுப் பகுதியினைத் தேர்ந்தெடுப்பதற்கு இலக்கிய மீளாய்வு கைகொடுக்கிறது.

7.ஒவ்வொரு ஆய்வாளரும் புதிதாக எதையாவது கண்டுபிடிக்கவேண்டும் என்பதல்ல.ஏற்கனவே நடைமுறையில் இருந்துகொண்டிருக்கும் கோட்பாடுகளை, உண்மைகளை சமகாலப் போக்குகளுக்கு அமைவாக இணைத்து அவ்விதியை மாற்றி அமைக்கலாம்.ஆனால் பிறருடைய ஆய்வு முடிவையோ அல்லது கருத்தையோ தனதாக்கிக் கொள்ளக்கூடாது என்பது ஆய்வியல் நியதி. மாற்றுக் கருத்துக்களை தக்க ஆதாரங்களுடன் ஒருவர் விளக்கலாம். இவற்றுக்கெல்லாம் இலக்கிய மீளாய்வே சிறந்த பொறிமுறையை கொடுக்க வல்லது.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இலக்கிய மீளாய்விற்கு அச்சாணியாக இருந்து ஆய்வாளரின் ஆய்வுக்கு தற்காலத்தில் உறுதுணை புரிவது தகவல்வளத் தரவுதளங்களே. பண்டுதொட்டு இருந்து வந்த கலாசாரம் ஆய்வு மற்றும் அறிவுப் பசியைப் போக்குவதற்கு நூலகங்களை மட்டுமே நம்பி இருந்தது. ஆய்வாளரின் இலக்கிய மீளாய்வு என்பது நூலகங்களை மட்டுமே மையப்படுத்தியிருந்தது. தகவல் தொழிநுட்பத் துறையின் வளர்ச்சி நூலகங்களுக்கு இணையாக பல மாற்று வழிகளை முன்வைத்தது. அதில் தகவல் மூலங்களின் களஞ்;சியமாக விளங்கும் தரவுதளங்கள் மிக முக்கியம் வாய்ந்தவை. ஆய்வாளர்களின் இலக்க்pய மீளாய்வுக்காக தரவுதளங்கள் பல்வேறுபட்ட வசதிவாய்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. தேடுசொற்களை உபயோகிப்பதன் மூலம் நொடிப்பொழுதில் தேவைப்படும் இலக்கியங்களைத் தரவுதளங்கள் கொடுக்கின்றன. புவியியல்சார் தடைகளைத் தாண்டி இணைய வசதிகள் மூலம் தங்குதடையற்ற இலக்கியத் தேடல்களுக்கு தரவுதளங்கள் உதவுகின்றன. நேர வித்தியாசமின்றி எவ்வேளைகளிலும் ஆய்வாளர்களின் இலக்கிய ஆர்வத்திற்கான தளத்தினை தரவுதளங்கள் வழங்குகின்றன. உலகெங்கிலுமுள்ள ஆய்வுசார் ஆவணங்களை ஒருங்கிணைத்து லட்சக்கணக்கான தகவல்களை சொற்ப நேரத்தில் ஆய்வாளருக்கு வழங்கும் செயற்றிட்டதில் தரவுதளங்களின் பங்கு மகத்தானது. ஆய்வுசார் இலக்கியங்களை வகைப்படுத்தி வௌ;வேறுபட்ட ஆய்வாளர்களின் விருப்பொழுங்கிற்கு ஏற்ப வழங்கும் வினைத்திறன்மிக்க சேவையை தரவுதளங்கள் ஆய்வாளர்களுக்கு கொடுக்கின்றது. ஆய்வுகள் ஒரு துறை சார்ந்தவை அல்ல. அறிவியல், மருத்துவம், சமூகவியல், பொருளாதாரம்,பொறியியல், தகவல் தொழிநுட்பம், கலை,தகவல் விஞ்ஞானம் ,மொழி,உளவியல் என பல்வேறுபட்ட துறைகளிலும் ஆய்வுகள் இடம்பெறுகின்றன. 

இந்த ஆய்வுகளிற்கெல்லாம் தேவைப்படக்கூடிய இலக்கிய மீளாய்வினை அந்தந்த துறைகளிற்கு ஏற்றாற்போல் தரவுதளங்கள் வழங்குகின்றன. பல்லாயிரக்கணக்கான ஆய்வுசார் ஆவணங்கள் எண்ணிமச்செயலாக்கத்திற்கு மாற்றப்பட்டு தரவுதளங்கள் மூலம் ஆய்வாளர்களுக்கு உதவுகின்றன.  பல்வேறுபட்ட மொழிகளிலும் இலக்கிய மீளாய்வினை மேற்கொள்வதற்கான வசதிவாய்ப்பு தரவுதளங்கள் மூலமாக ஆய்வாளர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. நேரத்தை வீண்விரயம் செய்யாது இலக்கிய மீளாய்வினை சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்ல பலவழிகளிலும் தரவுதளங்கள் உதவுகின்றன. ஒரு ஆவணத்தை ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கானவர்கள் பயன்படுத்துவதற்கான வாய்ப்பினை இணையம் மூலம் தரவுதளங்கள் ஏற்படுத்தியுள்ளன.  இவை மட்டுமல்லாது சமுதாய மேம்படுத்தலுக்கான வழிமுறைகள் கடந்தகால ஆய்வுகளில் உள்ளனவா என்பதையும் தரவுதளங்கள் மூலம் இலகுவில் அறியலாம். ஆய்வு விடயங்களைச் சேமித்து, பாதுகாத்து வைப்பதிலும் ஆய்வாளர்களுக்கு தரவு தளங்கள் உதவுகின்றன. தனிப்பட்ட ஆய்வாளர் ஒருத்தா' தனது ஆய்வுகளை தனது தேவைகளிற்கேற்ப சேமித்து ஒழுங்குபடுத்தி வைக்கக்கூடிய வசதிகள் தரவுதளங்களில் உள்ளமை ஆய்வுசார் செயற்பாடுகளில் முக்கிய இடம் பிடித்துள்ளது. இவ்வாறு ஆய்வாளர்களின் அடிநாதமாக விளங்கும் இலக்கிய மீளாய்வுக்கு தகவல்வளத் தரவுத்தளங்கள் பாரிய பங்களிப்பினைச் செய்கின்றன. 

துரையப்பா பிரதீபன்
ஊவாவெல்லஸப் பல்கலைக்கழகம்