கிழக்கு மாகாண பிரதம செயலாளரின் தலைமையில் உயிர்வாயு தொழினுட்பத்தை விரிவாக்குதல் சம்பந்தமான அமுலாக்கல் கூட்டம்

(ஹுஸைன்)

இலங்கையில் நிலைத்து நிற்கும் அபிவிருத்தியை உறுதி செய்யும் நோக்கிலும் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புக்களை குறைப்பதற்காகவும் உயிர்வாயு தொழினுட்பத்தை விரிவாக்கி அமுலாக்குதல் சம்பந்தமான மாகாண செயற்திட்டக் கூட்டம் PROVINCIAL BIOGAS PROMOTION PROGRAMME EASTERN PROVINCE கிழக்கு மாகாண பிரதம செயலாளர் செயலகத்தில் கடந்த ஞாயிறன்று  இடம்பெற்றது.

கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டி.எம்.எஸ். அபயகுணவர்தன தலைமையில் இடம்பெற்ற இந்த அமுலாக்கல் செயற் திட்டமிடல் கூட்டத்தில் கிழக்கு மாகாண பிரதம செயலக அதிகாரிகள், உள்ளுராட்சி நிறுவனங்கள், சூழல் பாதுகாப்பு அதிகார சபை, சுகாதாரத் திணைக்களம், விவசாயத் திணைக்களம், கால்நடை வளர்ப்பு, கல்வித் திணைக்களம், மேலும் திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை ஆகிய மாவட்டங்களின் திட்டமிடல் பணிப்பாளர்கள், கிராம அபிவிருத்தி வங்கி, வர்த்தக சம்மேளனப் பிரதிநிதிகள் ஆகியோர் பங்குபற்றினர்.


மாகாண உயிர்வாயு விரிவுபடுத்தல் திட்டம் ஜனதாக்ஸன் மற்றும் பீப்பிள் இன் நீட் Pநழிடந in நேநன ஆகிய பங்காளர் நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படுவதாக பயிற்சி வளவாளரும் ஜனதாக்ஸன் நிறுவனத்தின் திட்ட இணைப்பாளருமான அனுலா அன்ரன் தெரிவித்தார்.

 'இயற்கைச் சக்தி வளங்கள் இன்று குறைவடைந்து வருகின்றன. பூகோள வெப்ப மயமாதல் மற்றொரு பிரச்சினையாக உருவெடுத்துள்ளது என நிகழ்வைத் துவக்கி வைத்து உரையாற்றிய கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டி.எம்.எஸ். அபயகுணவர்தன தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது, இயற்கைச் சக்தி வளங்கள் குறைவடைதலாலும்,  பூகோள வெப்ப மயமாதலாலும் நாம் சமகாலத்தில் நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியேற்படுவதோடு எதிர்கால சமூகத்தையும் உலகில் உயிர்வாழ முடியாத ஆபத்தான சூழ்நிலைக்கு ஆளாக்குகின்றோம். எனவே சக்தி வளத் தேவைகள் பற்றி நாம் அக்கறையோடு சிந்திக்க வேண்டும்.

இன்று உலகில் இருக்கும் இயற்கை வளங்களை நாசம் செய்து விடாது அவற்றைப் பேணிப் பாதுகாத்து எதிர்கால சமுதாயத்திற்கு ஒப்படைக்க வேண்டும்.

இயற்கையாகவே கிடைக்கக் கூடிய சக்தி மூலங்களை நாம் மனித செயற்பாடுகளால் அழித்து விடாது பேணிப் பாதுகாப்பதோடு இருக்கும் வளங்களை மிகச் சிக்கனமாகப் பாவித்து மீதப்படுத்த வேண்டும்.

தற்போதைய இயந்திர மயமான வாழ்க்கை முறையில் நாம் இயற்கை வளங்களை வீணடிப்பதைப் பற்றி அக்கறையில்லாதவர்களாக இருந்து வருகின்றோம்.

இதுபற்றி சிந்திப்பது அவசியமும் அவசரமுமாகும். இல்லையேல் நிலம், நீர், காற்று, ஒளி, மற்றும் கனிமப் பொருட்கள் மூலம் தற்சமயம் கிடைத்துக் கொண்டிருக்கும் சக்தி மூலங்களை இழந்து விடுவதோடு எதிர்காலத்தில் எம்மையே நாம் அழித்துக் கொள்ள வேண்டிய அபாயகரமான சூழ்நிலை தோன்றும்.' என்றார்.

இலங்கையில் நிலைத்து நிற்கும் அபிவிருத்தியை உறுதிசெய்யும் நோக்கிலும் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புக்களை குறைப்பதற்காகவும் உயிர்வாயு தொழினுட்பத்தை விரிவாக்குதல் சம்பந்தமான பயிற்சி நெறிகளை ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசணையோடு சுவிற்ச் ஏசியா (Switchasia)  நிறுவனத்தின் ஊடாக பீப்பிள் இன் நீட் (People in Need)    நிறுவனமும் ஜனதாக்ஸன் (Janathakshan) நிறுவனமும் இணைந்து நடத்தி வருகின்றன. 

The European Union funded SWITCH-Asia Initiative “Up-scaling Biogas Technology for Sustainable Development and Mitigating Climate Change in Sri Lanka” 

உயிர்வாயு தொழினுட்பம் பற்றி விழிப்புணர்வூட்டும் தேசிய மற்றும் மாவட்ட ரீதியிலான விழிப்புணர்வுத் நிகழ்ச்சித் திட்டங்களின் ஒரு அங்கமாக இந்த செயற்திட்டக் கூட்டம் இடம்பெற்றது.

உயிர்வாயு தொழினுட்பத்தை ஊக்குவிப்பதற்கான திட்டமொன்றை தேசிய மற்றும் மாகாண ரீதியில் அபிவிருத்தி செய்வதற்காக தெரிவு செய்யப்பட்ட முக்கிய பகுதிகளில் பயிற்சிப் பட்டறைகளும் அமர்வுகளும் நடத்தப்பட்டுவருகின்றன.