கடந்த
ஒக்டோபர், 1 அன்று உலகெங்கும் கொண்டாடப்பட்ட சர்வதேச சிறுவர் தினத்தைச்
சிறப்பிக்கும்வகையில் ஆலையடிவேம்பு பிரதேச முன்பள்ளிச் சிறார்கள் மேற்கொண்ட
மட்டக்களப்பு நகருக்கான ஒருநாள் பொழுதுபோக்குச் சுற்றுலா நேற்று (06) இடம்பெற்றது.
ஆலையடிவேம்பு
பிரதேச செயலக முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.உஜெயந்தனால் ஒழுங்குசெய்யப்பட்ட
இச்சுற்றுலாவில் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. சிபாயா ரமீஸ், பிரதேச
செயலாளரின் வெகுஜனத் தொடர்புகள் உத்தியோகத்தர் எஸ்.ஜே.பிரேம் ஆனந்த், உளவள ஆலோசகர்
ஏ.எம்.சப்றினா ஆகியோருடன் சுமார் 50 முன்பள்ளிச் சிறார்களும், அவர்களது
பெற்றோர்களும், முன்பள்ளி ஆசிரியைகளும் கலந்துகொண்டிருந்தனர்.
ஆலையடிவேம்பு
பிரதேச செயலகத்திலிருந்து சிறார்களைச் சுற்றுலாவிற்கு வழியனுப்பும் நிகழ்வில் பிரதேச
செயலக உத்தியோகத்தர்களோடு இணைந்துகொண்ட பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன், அவர்களுக்கு
இனிப்புக்களைப் பகிர்ந்தளித்து வாழ்த்தி வழியனுப்பிவைத்தார்.
முதலில் அருள்மிகு
களுதாவளைப் பிள்ளையார் சந்நிதானத்துக்குச் சென்ற சுற்றுலாக் குழுவினர் அங்கு விசேட
பூஜை வழிபாடுகளில் பங்கேற்றனர். அடுத்து மீன்பாடும் தேனாடாம் மட்டு மாநகருக்குச்
சென்ற அவர்கள் அங்கு இயற்கை எழில் கொஞ்சும் மட்டக்களப்பு, பாலமீன்மடு வாவிக்கரையிலுள்ள
வெளிச்சவீட்டினைப் பார்வையிட்டதுடன், அங்குள்ள சிறுவர் பூங்காவில் விளையாடி
மகிழ்ந்தனர்.
தொடர்ந்து
அங்கிருந்து படகுகள் மூலம் மட்டக்களப்பு வாவி கடலோடு சங்கமிக்கும் கழிமுகக்
கரையில் நான்கு பக்கமும் நீரால் சூழப்பட்ட மணல் தீவில் எழிலோடு அமைக்கப்பட்டுள்ள சூழலியல்
பூங்காவுக்கு விஜயம் செய்து அங்குள்ள புராதன மிருக சிற்பங்களை ரசித்து விளையாடி
மகிழ்ந்தனர்.
அடுத்து மட்டக்களப்பு
புகையிரத நிலையம் சென்ற சுற்றுலாக் குழுவினர் அங்கு புகையிரத நிலைய அதிபரின்
அனுமதியுடன் கொழும்பு நகர் நோக்கிப் புறப்படத் தயாரான பிரயாணிகள் புகையிரதத்தைப்
பார்வையிட்டதோடு, அங்கிருந்து புறப்பட்டு கல்லடிக் கடற்கரைக்குச் சென்ற சிறார்கள் பெரும்
ஆரவாரத்தோடு மணல் விளையாட்டுக்களில் ஈடுபட்டனர்.
இறுதியாக
மாலை 6.00 மணியளவில் குறித்த சுற்றுலாக் குழுவினர் அங்கிருந்து திரும்பி
ஆலையடிவேம்பை வந்தடைந்தனர்.












