மட்டக்களப்பு மட்டிக்கழி கதிரொளி விளையாட்டுக் கழகம் நடத்திய அணிக்கு ஏழு வீரர்கள் பங்குபற்றும் விலகல் முறையிலான கால்பந்தாட்டச் சுற்றுப் போட்டி நேற்றும் இன்றும் (03,04.10.2015) மட்டிக்கழி கதிரொளி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்டச் சங்கத்தில் அங்கம் வகிக்கும் கழகங்களின் 32 அணிகள் பங்குபற்றியிருந்தன.
இதில் இறுதிப் போட்டியில் சீலாமுனை யங்ஸ்டார் கழக அணியும் மட்டிக்கழி கதிரொளி கழக அணியும் போட்டியிட்டன. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் சீலாமுனை யங்ஸ்டார் கழக அணி 1:0 எனும் பேறினால் வெற்றியடைந்து சம்பியனாகத் தெரிவாகியது.
இந்த வெற்றியினூடாக கதிரொளி கழகம் நடத்திய கால்பந்தாட்டப் போட்டிகளில் தொடர்ச்சியாக நான்காவது தடவையாக இறுதிப் போட்டிக்குத் தெரிவாகிய கழகமாகவும் மூன்று தடவைகள் சம்பியனாகிய கழகமாகவும் சீலாமுனை யங்ஸ்டார் தனது சுவடுகளைப் பதிவாக்கிக் கொண்டது.
இச்சுற்றுப் போட்டியில் இரண்டாமிடத்தை மட்டிக்கழி கதிரொளி விளையாட்டுக் கழக அணியும், மூன்றாமிடத்தை மைக்கல் மென் கழக அணியும், நான்காமிடத்தை ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி கழக அணியும்; பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இச்சுற்றுப் போட்டியில் சிறந்த விளையாட்டு வீரராக கதிரொளி கழகத்தைச் சேர்ந்த வீரர் முரளி அவர்களும், சிறந்த கோல் காப்பாளராக யங்ஸ்டார் கழகத்தைச் சேர்ந்த வீரர் ஜெயந்தி அவர்களும் தெரிவு செய்யப்பட்டார்கள்.
இன்றைய இறுதிப் போட்டியின் பரிசளிப்பு விழாவிற்கு அதிதிகளாக வருகை தந்த கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதல்வரும் தற்போதைய உறுப்பினருமான சி.சந்திரகாந்தன் அவர்களும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் அவர்களும், அம்பாறை மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வே.ஈஸ்பரன் அவர்களும், மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்டச் சங்கத்தின் தலைவர் சூ.உதயராஜ் அவர்களும், மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்டச் சங்கத்தின் சுற்றுப் போட்டிக் குழுத் தலைவர் ஐ.செல்வக்குமார் அவர்களும் மற்றும் கதிரொளி விளையாட்டுக் கழக நிருவாகிகளும், மட்டிக்கழி கிராம அமைப்புக்களின் நிருவாகிகளும் பரிசில்களை வழங்கி வைத்தார்கள்.
இறுதிப் போட்டியில் பங்குபற்றி முதலிடம் பெற்ற அணிக்கு பத்தாயிரம் ரூபாவும், இரண்டாமிடம் பெற்ற அணிக்கு ஐயாயிரம் ரூபாவும் மேலதிகமாக பிரதம அதிதியான சி.சந்திரகாந்தன் அவர்களால் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


















