தீர்க்கப்படாத காணிப் பிரச்சனைகள் தொடர்பாக ஆலையடிவேம்பில் இடம்பெற்ற நடமாடும் சேவை

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் (LLRC) பரிந்துரைகளுக்கமைய இதுகாலவரையிலும் தீர்க்கப்படாத காணி, காணிப்பங்கீடு, காணிச் சுவீகரிப்பு என்பன தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் காணிப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் சேவை இன்று (01) ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.


ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமைதாங்கிய குறித்த நடமாடும் சேவையில் கிழக்கு மாகாண சபையின் உதவிக் காணி ஆணையாளர் ஜி.ரவிராஜன், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அம்பாறை மாவட்டத்துக்கான உதவிக் காணி ஆணையாளர் பி.பரசுராமன், பொத்துவில் பிராந்திய உதவிக் காணி ஆணையாளர் ஜி.எல்.ஆரியதாச, அம்பாறை மாவட்ட காணி ஆணையாளர் அலுவலக உதவிக் காணி ஆணையாளர் திருமதி. ஏ.எல்.இப்திகார் பானு, அம்பாறை மாவட்ட உதவிக் காணி ஆணையாளர் அலுவலகக் காணி உத்தியோகத்தர்களான எம்.ஏ.எம்.ராபி, கே.எல்.எம்.முஸம்மில் உட்பட அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் காணிப் பிரிவு உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.


காலை 9.00 மணிக்கு ஆரம்பமான இந்நடமாடும் சேவைக்கு ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் நூறு தமிழ், முஸ்லிம் பொதுமக்கள் வருகைதந்ததுடன், சின்னமுகத்துவாரம் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட காணிச் சுவீகரிப்புக்கள் தொடர்பிலும் ஆலையடிவேம்பு மற்றும் தமண பிரதேச செயலாளர் பிரிவுகளின் எல்லைக் கிராமமான வாவாபுரம் பிரதேசத்தில் பெரும்பான்மையின மக்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் அத்துமீறிய குடியேற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் சட்டரீதியான தீர்வுகள் வழங்கப்பட்டதுடன், பொதுமக்களின் காணி சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்பட்டன.