ஆலையடிவேம்பு
பிரதேசத்திலுள்ள பின்தங்கிய கிராமமான அளிக்கம்பையில் வசிக்கும் வறிய குடும்பத்தைச்
சேர்ந்த சுதர்சன் என்றழைக்கப்படும் 30 வயதான துரை கந்தசாமி என்ற இரண்டு
பிள்ளைகளின் தந்தை கடந்த ஒரு மாதகாலமாக இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்தநிலையில்
தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நான்காம் இலக்க விடுதியில்
அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் தொடர்ச்சியாகக்
கூழ்மப்பிரிப்பு (டயாலிசிஸ்) சிகிச்சையளிக்கப்பட்டும் வருகின்றார்.
இந்நிலையில்
அவரது மனைவி திருமதி. இன்பமலர் கந்தசாமி, ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பொருளாதார
அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.இதயதினேஸ் ஊடாகப் பிரதேச செயலாளர் வி.ஜெகதீசனிடம்
விடுத்த வேண்டுகோளுக்கிணங்க ஆலையடிவேம்பு பிரதேச செயலக உத்தியோகத்தர்களிடமிருந்து
சேகரிக்கப்பட்ட சிகிச்சைக்கான உதவிப்பணம் இன்று பிரதேச செயலகத்தில் வைத்து விபரங்களுடன்
அவரது மனைவியிடம் கையளிக்கப்பட்டது.
அத்துடன்
குறிப்பிட்ட நோயாளி குறித்து தனக்கு அறிவித்து, பிரதேச செயலக
உத்தியோகத்தர்களிடமிருந்து குறித்த தொகைப்பணத்தினைச் சேகரித்து வழங்கிய பொருளாதார
அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.இதயதினேஸுக்கு நன்றி தெரிவித்த பிரதேச செயலாளர், கண்டியிலுள்ள
சிறுநீரக வைத்திய நிபுணரைத் தொடர்புகொண்டு விடயத்தைத் தெரிவித்து அவருக்கு
வழங்கவேண்டிய சிகிச்சைகள் தொடர்பாகக் கேட்டறிந்து அவரது மனைவியிடம் தெரிவித்தார்.
சிறுநீரகமாற்று
சத்திர சிகிச்சையை மேற்கொள்ளும்பொருட்டு உடனடியாக அவரைக் கண்டி வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்ல
வேண்டியுள்ள நிலையில் குறித்த சத்திரசிகிச்சைக்குத் தேவையாகவுள்ள பெருந்தொகைப்
பணத்தினைத் திரட்டிக்கொள்ள முடியாதநிலையில் மிகவும் வறியநிலையிலுள்ள அவரது
குடும்பத்துக்கு தயவுள்ளம் கொண்டோர் பெருமனது கொண்டு தங்களால் முடிந்தளவு பணத்தை
அவரது மனைவியின் வங்கிக் கணக்கிலக்கம் 078020156029 (ஹற்றன் நஷனல் வங்கி,
அக்கரைப்பற்று) இல் வைப்புச்செய்யவேண்டுமெனக் கேட்டுக்கொண்டதோடு, சமுக சேவைகள்
திணைக்களத்தால் அம்பாறை மாவட்டத்தில் சிறுநீரக நோயாளிகளுக்கு மாதாந்தம் வழங்கப்படவுள்ள
உதவித்தொகையைப் பெற்றுக்கொடுக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்ததார்.
அத்துடன் குறித்த நோயாளியின் சுகநலன்களை அவதானித்து தனக்கு அவ்வப்போது
தெரியப்படுத்துமாறும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.இதயதினேஸிடம்
கேட்டுக்கொண்டார்.
இதனடிப்படையில்
குறித்த நோயாளியின் சிறுநீரக சத்திர சிகிச்சைக்கு உதவ விரும்புவோர் 0770520252
என்ற இலக்கத்தினூடாக அவரது மனைவியைத் தொடர்புகொண்டு அதுகுறித்த விபரங்களைப்
பெற்றுக்கொள்ளமுடியும்.













