(சிவம்)
போரினால் அதிகமாகப் பாதிக்கப்பட்ட வடபகுதிக்கு கிழக்கு மற்றும் தெற்கை விட புகையிரத சேவை வசதிகள் முன்னுரிமைப்படுத்தப்பட்டுள்ளன என போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
மட்டக்களப்பு புகையிரத நிலையத்தின் உள்ள குறைபாடுகளை நிலைய அதிபர்களுடன் ஆராயும் கூட்டம் சனிக்கிழமை (10) புகையிரத நிலைய மண்டபத்தில் நடைபெற்றபோது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவ்வாறு தெரிவித்தார்.
கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் மேலும் கூறுகையில்
மட்டக்களப்பில் மதுப்பழக்கம் அதிகரித்துள்ளது இதனால் சமூக சீரழிவுகள் அதிகம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிக்காததனால்; அதிக விபத்துக்கள் நடைபெறுகின்றன. நாம் மனிதர்கள் சட்டத்திற்கு அடிபணிந்து அதை மதிக்கும் நாகரீகமான மனிதர்களாக மாறவேண்டும்.
மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் 15 புகையிரத நிலைய அதிபர்கள் உள்ளனர். பயணிகள் போக்குவரத்து சீட்டுக்கள் தற்போது இணையத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். அதிகமான அதிபர்கள் தேவையில்லை என்றார்.
இதன்போது ஏறாவூர் புகையிரத நிலைய அதிபர் இணையத்தில் பதிவு செய்யும் வசதியை ஏற்படுத்தி தருமாறு கோரிக்கை விடுத்தபோது உறுதியளித்தார்.
மட்டக்களப்பு அரசாங்க அதிபர் பி.எஸ்.எம். சாள்ஸ், பிரதி இயக்க அத்தியட்சகர் வி.எஸ். பொல்வத்தகே, பாதைகள் பிரதம பொறியியலாளர் ஜே.உதயகுமார், அமைச்சின் செயலாளர் நிகால் சோமசந்திர, பிரத்தியேகச் செயலாளர் ஏ.டி.டி.எஸ். இந்திரசேகர ஆகியோர் கலந்து கொண்டனர்.












