கல்முனை, சம்மாந்துறை ஆகிய கல்வி வலயங்களிலுள்ள தமிழ் பாடசாலைகளை ஒன்றிணைத்து புதிய கல்முனை மத்திய கல்வி வலயம் ஒன்றை ஏற்படுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் தனிநபர் பிரேரணை ஒன்றை சபையில் முன்வைத்து உரையாற்றினார்.
கிழக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வு கடந்த செவ்வாய்க்கிழமை தவிசாளர் சந்திரதாஸ கலப்பதி தலைமையில் நடைபெற்றது.
மாதாந்த அமர்வில் மேற்படி விடயம் குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில்,
கல்முனை கல்வி வலயத்தில் 22 தமிழ் பாடசாலைகளும், சம்மாந்துறை கல்வி வலயத்தில் 32 தமிழ் பாடசாலைகளும் உள்ளன. அப்பாடசாலைகளில் 16,785 தமிழ் மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். 1108 ஆசிரியர்கள் கல்விப்பணியாற்றுகின்றனர்.
இந்நிலையில் இப்பாடசாலைகளில் நிர்வாக ரீதியாக பௌதிக வளப்பங்கீடு, ஆசிரியர் இடமாற்றம் மற்றும் ஏனைய விடயங்களில் பாரபட்சம் காட்டப்படுகின்றது. இந்நிலைமை மாற்றியமைக்கப்பட வேண்டும். அதற்காக நிலத் தொடர்பற்ற வகையில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் உருவாக்கப்பட்டதைப் போன்று இந்த அனைத்துப் பாடசாலைகளையும் ஒன்று சேர்த்து தனியான ஒரு கல்வி வலயம் உருவாக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கையை மாகாண கல்வியமைச்சு முன்னெடுக்க வேண்டும் என மாகாண சபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் கிழக்கு மாகாண சபையில் தனி நபர் பிரேரணையை முன்மொழிந்தார்.













