வெருகல் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற முன்பள்ளி ஆசிரியர்களுக்கான திசைமுகப்படுத்தல் பயிற்சிநெறி

சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சின் சிறுவர் செயலகத்தின் அனுசரணையுடன் வெருகல் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி நிலையங்களில் கல்வி கற்பிக்கும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான திசைமுகப்படுத்தல் ஒருநாள் பயிற்சிநெறியானது வெருகல் பிரதேச செயலக முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.நே.பிருந்தாபன் அவர்களின் ஏற்பாட்டில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 15.10.2015 ம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. 

இந்நிகழ்வில் முதற்கட்டமாக உடல்மொழி, நடித்துக்காட்டல் முறையில் சிறார்களுக்கு கற்பித்தல், கதைகூறுதல், சிறுவர்பாடல்களுக்கு ஏற்ப நடித்துக்காட்டல், சிறுவர் கதைகளை உருவகப்படுத்தும் வழிமுறைகள் தொடர்பான பயிற்சிகளும், முன்பள்ளி பாடசாலை சூழலில் இடம்பெறுகின்ற விபத்துக்கள், அவற்றை தடுத்தல், சிறுவர்களை பாதுகாத்தல் முதலானவற்றை அடிப்படையாக கொண்ட பயிற்சி நெறிகள் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டன.

இந்நிகழ்வின் வளவாளர்களாக கிழக்குப்பல்கலை கழக நாடகமும் அரங்கியல்துறையில் விஷேட பட்டம் பெற்றவரும், நாடகத்துறையில் கலைஞராகவும் திகழும் திரு.யோ.நிஷாந்தராசன் மற்றும் சேருவில பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் ஜனாப்.ஏ.ஙஸ்ரி ஆகியோர் செயற்பட்டனர். இப்பயிற்சி நெறியில் 21 முன்பள்ளி பாடசாலைகளை சேர்ந்த 42 முன்பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டதுடன் பிரதேச செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் திருமதி.தா.ரசுகுமாரி, திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.கே.தேவராசா, மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.சீ.தில்லைவாசன், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.வாகீஸ்வரி ஆகியோரும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.