கல்வியமைச்சு நாடளாவிய ரீதியில் பாடசாலை மாணவர்களிடையே கணித அறிவை விருத்தி செய்யும் நோக்குடன் வருடாந்தம் நடாத்தி வரும் கனிஸ்ட மற்றும் சிரேஸ்ட பிரிவினருக்கிடையிலான கணித நாடகப் போட்டிகளின் தேசிய மட்ட இறுதிப் போட்டி கடந்த 15,16 .10.2015 ஆந் திகதிகளில் கண்டி கூட்டுறவு மண்டபத்தில் சிங்கள, தமிழ் மொழிப் பிரிவுகளுக்காகத் தனித்தனியே நடத்தப்பட்டது.
இதில் ஒன்பது மாகாணங்களிலுமிருந்து தெரிவான பாடசாலைகளின் நாடகங்கள் பங்குபற்றியிருந்தன. இவற்றுள் தமிழ் மொழியில் சிரேஸ்ட பிரிவில் கிழக்கு மாகாணத்திலிருந்து கல்குடா கல்வி வலயத்தின் வாழைச்சேனை கறுவாக்கேணி விக்னேஸ்வரா வித்தியாலயத்தினுடைய நாடகம் ஆற்றுகை செய்யப்பட்டிருந்தது.
இந்நாடகம் இரண்டாமிடத்தைப் பெற்றுக் கொண்டதுடன் சிறந்த நெறியாள்கை, சிறந்த பிரதியாக்கத்திற்கான தேசிய விருதுகளுக்கும் தெரிவாகியது.
இந்த நாடகத்தினை பாடசாலையின் நாடகப்பாட ஆசிரியரான து.கௌரீஸ்வரன் அவர்களும் கணிதப் பாட ஆசிரியையான திருமதி குணாளினி ஜெயராசா அவர்களும் உருவாக்கி நெறிப்படுத்தியிருந்தார்கள், இந்நாடகத்துக்கான உடை ஒப்பனையினை ஓவியப் பாட ஆசிரியரான க.நிமலதாசன் அவர்கள் மேற்கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.













