
மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்டச் சங்கமும் மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகமும் இணைந்து நடத்தும் ரஞ்சித் ரொட்ரிகோ சவால் கிண்ணத்திற்கான பாடசாலைகளுக்கிடையிலான மாபெரும் கால்பந்தாட்டச் சுற்றுப் போட்டியில் அமிர்தகழி சித்தி வினாயகர் வித்தியாலயமும் மெதடிஸ்த மத்திய கல்லூரியும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன.
நேற்றைய தினம் (19) பிற்பகல் மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் மட்டக்களப்பு புனித மிக்கேல் தேசிய கல்லூரி அணியும்; அமிர்தகழி சித்தி வினாயகர் வித்தியாலய அணியும் 1:1 எனும் சமநிலையில் போட்டியை நிறைவு செய்தமையால் வெற்றி தோல்வி காண்பதற்காக நடத்தப்பட்ட தண்டனை உதைப் போட்டியில் அமிர்தகழி சித்தி வினாயகர் வித்தியாலய அணி 3:2 எனும் பேறுகளால் வெற்றி பெற்றது.
இரண்டாவது அரையிறுதியில் கல்லடி முகத்துவாரம் விபுலானந்தா வித்தியாலய அணியும் மெதடிஸ்த மத்திய கல்லூரி அணியும் பங்குபற்றிய நிலையில் இரு அணிகளும் எவ்வித பேறுகளையும் பெறாத நிலையில் வெற்றி தோல்வி காண்பதற்காக நடத்தப்பட்ட தண்டனை உதைப் போட்டியில் 3:2 எனும் பேறுகளால் மெதடிஸ்த மத்திய கல்லூரி அணி வெற்றி பெற்றது.
எதிர்வரும் 07.11.2015 ஆந் திகதி மாலை இறுதிப் போட்டி மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை உதைபந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவர் திரு ரஞ்சித் ரொட்ரிகோ அவர்களும், தற்போதய தலைவர் திரு அனுர டி சில்வா அவர்களும் முதன்மை அதிதிகளாக வருகை தந்து இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் பாடசாலை அணிக்கு சவால் கிண்ணத்தை வழங்கவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்டச் சங்கத்தின் நிருவாகத்தினர் தெரிவித்துள்ளார்கள்.


















