(ஹுஸைன்)மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களின் எல்லையிலுள்ள வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் சுமார் 15 வீதமான பிள்ளைகளையே பெற்றோர் பாலர் பாடசாலைகளுக்கு அனுப்புகின்றனர் இது கவலையளிக்கும் விடயம் என வெருகல் பிரதேச செயலாளர் எம். தயாபரன் தெரிவித்தார்.
வெருகல் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பெற்றோருக்கு கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றி விழிப்பூட்டும் கூட்டம் திங்கட்கிழமை வெருகல் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் இடம் பெற்றது.
வெருகல் பிரதேசத்தைச் சேர்ந்த பாலர் பாடசாலைக்குச் சேர்ப்பிக்க வேண்டிய பாலர்கள் மற்றும் பெற்றோர், பாலர் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகளும் கலந்து கொண்ட கூட்டத்தில் பிரதேச செயலாளர் உரையாற்றினார்.
அங்கு தொடர்ந்து பெற்றோர் மத்தியில் உரையாற்றிய பிரதேச செயலாளர் தயாபரன் கூறியதாவது, பாடசாலைக் கல்வி என்பது சிறார்களின் உரிமையாகும்.
இதனை பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும். ஆரம்பப் பிரிவு வகுப்புக்களுக்கு மாணவர்களைக் கட்டாயம் அனுப்ப வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு இருக்கின்றது.
பாடசாலைக்குச் செல்ல வேண்டிய பருவத்தில் பிள்ளைகளைத் தமது சொந்த அலுவல்களுக்காகவும், தொழில்களுக்காகவும் பயன்படுத்தும் பெற்றோருக்கெதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையிட்டு பெற்றோர் அறிவுறுத்தப்படுகின்றீர்கள்.
இந்தப் பிரதேச செயலகப் பிரிவில் கல்விக்கான பாடசாலைகள், ஆசிரியர்கள், மற்றும் போக்குவரத்து உட்பட சகல வசதிகளும் உள்ளன. இதற்கும் மேலதிகமாக இலவச பாடசாலைப் புத்தகங்கள், இலவச சீருடைத்துணி, இலவசக் கல்வி என்பனவற்றை அரசு வழங்குகின்றது. அரச சார்பற்ற நிறுவனங்களும் கல்விக்காக உதவுகின்றன.
எனவே, இந்த வாய்ப்பை பெற்றோர் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
எதிர்வருகின்ற 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் தரத்திற்குச் சேர்ப்பிக்கின்ற வயதையடைந்த எந்தப் பிள்ளையையும் பாடசாலைக்குச் சேர்ப்பிக்காது பெற்றோர் வீட்டில் வைத்திருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க பிரதேச செயலக அதிகாரிகள் தயங்க மாட்டார்கள்' என்றார்.
இக்கூட்டத்தில் வெருகல் பிரதேச செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி ஏ. ரசுகுமாரி, சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் எம்.எம். ஷாபி, முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் என். பிருந்தாவன் உட்பட இன்னும் பலர் கலந்து கொண்டனர்.
















