கிழக்கின் அபிவிருத்திக்கு அவுஸ்திரேலிய அரசு 20 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை வழங்கவுள்ளது

(ஹுஸைன்)
கிழக்கின் அபிவிருத்திக்கு அவுஸ்திரேலிய அரசு 20 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை வழங்குவதற்கு இணங்கியுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் வேலை வாய்ப்பற்றுள்ள இளைஞர், யுவதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கு தொழிற் பயிற்சிகளை வழங்கி தொழில் உற்பத்தித் தொழிற்துறையில் அவர்களை ஈடுபடுத்துவதற்காக இந்த நிதி பயன்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் றொபின் மூடி வார இறுதியில் சந்திப்பை மேற்கொண்டபோது இந்த உறுதி மொழி வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.


இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகருக்கும்  கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டுக்கும் இடையிலான சந்திப்பு, கல்லடியிலுள்ள ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தச் சந்திப்புத் தொடர்பில் ஞாயிறன்று ஊடகங்களுக்கு தெரிவித்தபோதே முதலமைச்சர் இதனைக் கூறினார்.