தருமசங்கரி மைதானத்துக்கு பிரதியமைச்சர் விஜயம். மைதானத்தின் அவலநிலையையும் பார்வையிட்டார்

ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள பொது விளையாட்டு மைதானமான தருமசங்கரி மைதானத்தைப் புனருத்தானம் செய்வது தொடர்பாக விளையாட்டுத்துறைப் பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹாரிஸ் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் நேற்று (12) காலை அங்கு நேரடி விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர். 

அம்பாறை மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கே.கோடீஸ்வரன் விடுத்த வேண்டுகோளுக்கமைய பிரதியமைச்சரும், விளையாட்டு அமைச்சின் செயலாளர் டி.எம்.ஆர்.பி.திஸாநாயக்க மற்றும் அமைச்சின் பொறியியலாளர்கள் அடங்கிய குழுவினர் இவ்விஜயத்தை மேற்கொண்டிருந்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரனுடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துக்கு முதலில் வருகைதந்த பிரதியமைச்சர் தலைமையிலான அதிகாரிகள் குழுவினரை பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் வரவேற்று, குறித்த மைதானம் தொடர்பாகக் கலந்துரையாடினார். இதன்போது பிரதியமைச்சரிடம் பேசிய அவர், கடந்த ஆட்சிக்காலத்தில் இம்மைதானப் புனரமைப்புக்காக ஒதுக்கப்பட்ட நிதியின் அளவு மிகக் குறைவாக இருந்ததாகவும் கால்நடைகளின் அத்துமீறிய பிரவேசத்தைத் தடுக்கும்பொருட்டு இம்மைதானத்துக்கான சுற்றுமதிலின் ஒரு பகுதியையும் பார்வையாளர்கள் மண்டபத்தின் ஆரம்பகட்ட வேலைகளை மாத்திரம் செய்யவே அந்நிதி போதுமானதாக இருந்ததாகவும் குறிப்பிட்டார்.

அங்கு கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன், ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இடம்பெறும் எல்லாவிதமான விளையாட்டு நிகழ்ச்சிகளும் குறித்த மைதானத்திலேயே இடம்பெற்றுவருவதாகவும், இப்பிரதேச இளைஞர்கள் தமது விளையாட்டுத் திறன்களை வளர்த்துக்கொள்வதற்கான முக்கியதொரு மையமாக விளங்கும் குறித்த மைதானத்தை புனரமைத்துத் தருமாறு ஆலையடிவேம்பு பிரதேச இளைஞர்கள் தொடர்ச்சியாகத் தம்மிடம் விடுத்த கோரிக்கைகளுக்கு அமைவாகவே பிரதியமைச்சருக்குத் தான் இந்த வேண்டுகோளை விடுத்ததாகவும் குறிப்பிட்டார். அத்துடன் மழைக்காலங்களில் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கும் மைதானத்தை மண் நிரப்பிச் சீரமைப்பதற்குக் கடந்தகாலங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் வெறும் கண் துடைப்பாக மட்டுமே அமைந்திருந்ததாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து அம்மைதானத்துக்கு நேரடியாகச் சென்ற பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹாரிஸ் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் அண்மையில் பெய்த கடும்மழையினால் நீர் நிரம்பி, சேறும் சகதியுமாகக் காட்சியளித்த மைதானத்தையும், அங்கு அரைகுறையாக வெள்ளத்துக்கு நடுவே அமைக்கப்பட்டிருந்த பார்வையாளர்கள் மண்டபத்தின் அவலநிலையையும் பார்வையிட்டதுடன், அதிகாரிகளோடு கலந்துரையாடி அம்மைதானத்தை உடனடியாகத் திருத்தித்தர நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டார்.

இதன்போது பிரதியமைச்சரைச் சந்தித்த பொதுமக்கள் கடந்தகாலங்களில் இதேபோன்று வாக்குறுதியளித்து தமது வாக்குகளைப் பெற்று பாராளுமன்றம் சென்ற ஒரு அரசியல்வாதி பிற்காலத்தில் இந்த மைதானத்தின் அபிவிருத்திகளுக்குத் தடையாக இருந்ததாகவும், கடந்த அரசாங்கத்தினால் இந்த மைதானத்தின் புனரமைப்புக்காக ஒதுக்கப்பட்ட நிதியினை வேறு விடயங்களுக்காக அவர் செலவிட்டதாகவும் முறையிட்டதுடன், இப்பிரதேச இளைஞர்களின் கோரிக்கைகளை அவர் அரசியல் பழிவாங்கல் நோக்கத்தோடு நிராகரித்ததாகவும் குறிப்பிட்டனர். அத்துடன் தமது அவசியத் தேவையைத் பிரதியமைச்சரான தங்களுக்குத் தெரியப்படுத்தி இங்கு வரவழைத்ததன் மூலம் விரைவில் இம்மைதானம் புனரமைக்கப்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டமைக்காக பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரனுக்கு நன்றிகளைத் தெரிவித்தனர்.