முன்பள்ளிகளில் மாதிரித் தோட்டம் அமைப்பது தொடர்பான தெளிவூட்டல் கருத்தரங்கும் மரக்கன்றுகள் விநியோகமும்

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இயங்கிவருகின்ற பாலர்களில் போஷாக்கு வழிகாட்டல் திட்டத்தின்கீழ் பாடசாலை வளாகங்களில் பயன்தரும் பழமரங்களைக் கொண்டு மாதிரித் தோட்டங்களை அமைப்பது தொடர்பாகப் பாலர் பாடசாலைகளின் ஆசிரியைகளையும் மாணவர்களின் பெற்றோரையும் தெளிவுபடுத்தும் கருத்தரங்கும் பழமரக் கன்றுகள் விநியோகமும் இன்று (19) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலக முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.உஜெயந்தனால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இக்கருத்தரங்கிற்கு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமை தாங்கியதுடன், அக்கரைப்பற்று கிழக்கு பிரதேச விவசாயப் போதனாசிரியர் எம்.கோகுலராஜ் வளதாரராகவும் கலந்துகொண்டார்.

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இயங்கிவருகின்ற சுமார் 26 பாலர் பாடசாலைகளின் ஆசிரியைகளும், பெற்றோரும், பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் பங்குபற்றியிருந்த குறித்த கருத்தரங்கில் தலைமையுரையாற்றிய ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர், பாலர் பாடசாலை வளாகங்களில் பழமரங்களை நடுகை செய்யும் வேலைத்திட்டம் தொடர்பாகப் பங்குபற்றுனர்களைத் தெளிவுபடுத்தியதுடன், முன்பள்ளிகளுக்குச் செல்லும் சிறார்களின் உணவுப் பழக்கவழக்கங்களில் மாற்றங்களைக் கொண்டுவரவேண்டியதன் அவசியம் குறித்தும் பேசினார். இன்றைய அவசர உலகில் பெற்றோர்கள் பெரும்பாலும் சில நிமிடங்களில் தயாரிக்கக்கூடிய துரித உணவுக் கலாசாரத்துக்குத் தமது பிள்ளைகளை அடிமையாக்கியுள்ளதோடு போஷாக்குமிக்க உணவுகளை அவர்களுக்கு வழங்குவதில் அதிக கவனம் செளுத்துவதில்லையெனவும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பாலர் பாடசாலை வளாகங்களில் மாதிரித்தோட்டம் ஒன்றை அமைக்கும்போது பொருத்தமான விதைகளைத் தெரிவுசெய்வது, மாதிரித்தோட்டம் பற்றிய பிரயோகரீதியான பயிற்சிகள் என்பவற்றை விவசாயப் போதனாசிரியர் எம்.கோகுலராஜ் முன்னெடுத்தார். அத்துடன் இரசாயன வளமாக்கிகளைத் தவிர்த்து, இம்மாதிரித்தோட்டங்களில் சேதனப் பசளைகளைப் பயன்படுத்துவது தொடர்பாகவும் அவர் அங்கு வலியுறுத்திக் கூறினார்.

தொடர்ந்து மாதிரித் தோட்டங்களை அமைக்கும் வழிமுறைகள் அடங்கிய துண்டுப்பிரசுரங்கள் பங்குபற்றுனர்களுக்கு விநியோகிக்கப்பட்டதுடன், அட்டாளைச்சேனை விவசாயப் பயிற்சி நிலையத்திலிருந்து கொண்டுவரப்பட்டிருந்த பழமரக்கன்றுகள் பிரதேச செயலாளரின் தலைமையில் பாலர் பாடசாலைகளின் ஆசிரியைகளுக்கும் பெற்றோருக்கும் வழங்கிவைக்கப்பட்டன.

குறித்த நிகழ்வுகள் யாவும் பிரதேச செயலாளரின் வெகுஜனத் தொடர்புகள் உத்தியோகத்தர் எஸ்.ஜே.பிரேம் ஆனந்தின் நன்றியுரையுடன் நிறைவுபெற்றன.