மக்களிடையே வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தி, அறிவுபூர்வ சமூகமொன்றைக் கட்டியெழுப்பும் நோக்குடன், இலங்கையில் 2004ஆம் ஆண்டில் பிரகடனப் படுத்தப்பட்ட தேசிய வாசிப்பு மாத விழிப்பணர்வு நடைமுறை, வருடாவருடம் நாடளாவியரீதியில் அரசாங்கப் பாடசாலைகள் மற்றும் நிறுவனங்களில் வெகு கோலாகலமாக நடாத்தப்பட்டு வருவதன் அங்கமாக மட்டக்களப்பு தேசிய பாடசாலைகளி லொன்றான சிவானந்தா வித்தியாலயத்தில் 'நல்ல வாசிப்பினூடு சிறந்த ஆளுமையுள்ள மாணவர் சமுதாயத்தினை உருவாக்குவோம்' எனும் தொனிப்பொருளில், நன்கு திட்டமிடப்பட்ட முறையில் ஒக்டோபர் மாத முழுவதும் போட்டி நிகழ்வுகள் நடாத்தப்பட்டு, அதன் இறுதி விழா, 30ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று சுவாமி நடராஜாநந்தா ஞாபகார்த்த மண்டபத்தில் விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.
வித்தியாலய அதிபர் திரு. கே. மனோராஜ் தலைமையில் நிகழ்ந்த இவ்விழாவில், பிரதம அதிதியாக இலங்கை நூலக மன்ற, கிழக்கு மாகாண நூலக, தகவல் விஞ்ஞான ஒருங்கிணைப்பாளரும், விரிவுரையாளரும், கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட நூலக அதிகாரியுமான திரு. தீசன் ஜெயராஜ் அவர்களும், கௌரவ அதிதியாக மட்டக்களப்பு மண்முனை வடக்கு கோட்டக்கல்வி அதிகாரி திரு. ஏ. சுகுமாரன் அவர்களும், சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு கல்வி வலய தமிழ்ப் பாட அலகின் உதவிக் கல்விப் பணிப்பாளரும் பாடசாலை நூலக இணைப்பாளருமான திரு. ரீ. யுவராஜன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்
மங்கல விளக்கேற்றலுடனும், மாணவன் சிற்சபேசனின் இறை வணக்கப் பாடலுடனும் ஆரம்பித்த நிகழ்வின் ஆசியுரையினை, மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன், தலைவர் ஸ்ரீமத் சுவாமி சதுர்புஜாநந்தாஜீ மஹராஜ் அவர்கள் நிகழ்த்த, தொடர்ந்து வித்தியாலய மாணவன் தினேஷின் வரவேற்பு நடனமும், அதிபரின் தலைமையுரையும் இடம்பெற்றது.
அதிதிகளின் உரைகளும், பேச்சுப் போட்டியில் 1ஆம் இடம்பெற்ற செல்வன் க.யோகேஷனின் பேச்சும் நிகழ்த்தப்பட்டதுடன், வித்தியாலய ஆசிரியர் திரு. டீ. ஆர். மரியசெல்வம், அறிவின் தத்துவத்தை சினிமா பாடல் வடிவில் தந்தார். தேசிய வாசிப்பு மாதத்தையொட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பும் கட்டம் கட்டமாக நிகழ்வை அலங்கரித்தன. சிறப்பான இவ்விழா, வித்தியாலய பிரதி அதிபர் திரு மகாலிங்கசிவம் அவர்களின் நன்றியுரையுடன் நிறைவுக்கு வந்தது.
தேசிய மாத நிகழ்வுகளின் பூர்வாங்க ஏற்பாடுகளை வித்தியாலய நூலக உத்தியோகத்தர் திரு. ரீ. ஜீவதாஸ் நன்கு திட்டமிட்ட முறையில் நடாத்தியிருந்தமை வெகுவாகப் பாராட்டப்பட்டது.












