ஆலையடிவேம்பு
பிரதேசத்தில் இயங்கிவரும் பாலர் பாடசாலைகளது கண்காணிப்பு, பாதுகாப்பு மற்றும்
அபிவிருத்தி என்பன தொடர்பில் அமைக்கப்பட்டுள்ள இணைப்புக்குழுவின் இவ்வருடத்துக்கான
இரண்டாவது உத்தியோகபூர்வக் கலந்துரையாடல் இன்று (16) காலை 9.00 மணிக்கு
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
ஆலையடிவேம்பு
பிரதேச முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.உஜெயந்தனால் ஏற்பாடு
செய்யப்பட்டு, திவிநெகும அபிவிருத்தித் திணைக்களத்தின் ஆலையடிவேம்பு பிரதேசத்
தலைமையக முகாமையாளர் கே.நேசராஜா தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் அக்கரைப்பற்று
பொலிஸ் நிலையப் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவின் உத்தியோகத்தர்கள், சிறுவர்
நன்னடத்தை அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.பி.ஏ.வஸீம், ஆலையடிவேம்பு பிரதேச சபையின்
அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.கேமலதாசன், பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்
எஸ்.எல்.எம்.ஹாறூன், கிழக்கு மாகாண முன்பள்ளிக் கல்விப் பணியகத்தின் முகாமைத்துவ
உதவியாளர் பி.மோகனதாஸ், பிரதேச வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி
உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்திப்
பிரிவின் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் அதிகமாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுவரும் விடயங்களான
பாலர் பாடசாலைகளின் சுகாதாரமற்ற சூழல், தரமற்ற கழிப்பிட வசதிகள், சிறார்களுக்கு
வழங்கப்பட்டுவரும் போஷாக்கற்ற உணவுகள், குடிநீர் போன்றவற்றை பொதுச்சுகாதாரப்
பரிசோதகர்களின் உதவியுடன் பரிசோதனைக்கு உட்படுத்தல், ஆங்கிலக் கல்வியை
முதன்மைப்படுத்தி அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பாடசாலைகளைக் கண்டறிந்து அவற்றுக்கு
எதிராக சட்டநடவடிக்கை எடுத்தல், முன்பள்ளிகளில் எழுத்துக்களைப் போதிக்கும் கல்வி
முறையைத் தடுத்து அறிவுத்திறனை வளர்க்கும் விளையாட்டுக்களை முதன்மைப்படுத்தும்
போதனை முறையை வழக்கத்துக்குக் கொண்டுவரல், தற்போது மழைக்காலம் ஆரம்பித்துள்ள
நிலையில் பாலர் பாடசாலைகளுக்கு அண்மித்ததாகக் காணப்படும் குழிகள், குன்றுகளைப் எழுத்து
மூலம் அறிவித்து பிரதேச சபையின் உதவியுடன் கனரக வாகனங்களைப் பயன்படுத்தி
சீராக்கல், முன்னனுமதி பெறப்படாத சிறுவர்களுக்கான பகல்நேரப் பராமரிப்பு மையங்களைப்
பதிவுசெய்தல், சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பெண்கள்
மற்றும் சிறுவர் பிரிவின் உத்தியோகத்தர்களின் உதவியுடன் குற்றவாளிகளைச்
சட்டநடவடிக்கைக்கு உட்படுத்தல் போன்ற பல விடயங்கள் அறிக்கையிடப்பட்டதுடன், பிரதேச
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் உதவியுடன் 5 வயதுக்குக்
குறைந்த சிறுவர்களின் தாய்மார் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களைப் பெற்றுச் செல்வதைத்
தடுத்துநிறுத்தும் வேலைத்திட்டங்களைக் கிரமமாக முன்னெடுத்தல் போன்றன தொடர்பான
தீர்மானங்கள் இக்கலந்துரையாடலில் எடுக்கப்பட்டுள்ளன.
























