ஒரேவேளையில் பல்வேறுப்பட்ட பண்பாட்டு மரபுகளுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் கூட்டங்களின் வாழ்வியல் இயக்கங்கள் சவால்கள் நிறைந்தவை. 21ம்; நூற்றாண்டில் பாரம்பரியமான, நவீனமான, உலகமயமான சமூகப் பண்பாட்டுச் சூழல்களில் வாழும் ஏற்றத்தாழ்வுகள் கொண்ட மக்கள் கூட்டங்களும் அவற்றின் இயக்கங்களும் இயங்கியல்களும் இருவழிப்பட்டவை. ஒன்று, ஆதிக்கங்களுடன் ஒன்றிணைதலுக்கான மேல்நிலையாக்கம். மற்றையது, ஆதிக்க நீக்கங்களுக்கான விடுதலை இயக்கம்.
சமூகங்களின் வித்தியாசங்களும் பன்மை நோக்கங்களும் கொண்ட இயங்கியலில் இவை இரண்டுமே நிகழ்ந்து வருபவையாக இருக்கும். ஆயினும் மேல்நிலையாக்கத்தினூடாக வெளித்தோற்றத்தில் ஒரே தராதரமான ஒரு சமூக உருவாக்க முன்னெடுப்புக்கள் அதிகாரப் பூர்வமானதாக இருப்பதே வலுப்பெற்றதாக இருக்கும். ஒரு தளத்தில் ஆதிக்க நீக்கத்திற்கான விடுதலை முன்னெடுப்பு இன்னொரு தளத்தில் அதற்கெதிராக இயங்குபதையும் காணமுடியும். உதாரணமாக பெண் விடுதலையை இரண்டாம் பட்சமாகக் கருதுகின்ற அல்லது கருத்தில் கொள்ளாத விளிம்பு நிலை மக்களின் போராட்டங்கள், சாதிய விடுதலையை கருத்தில் கொள்ளாத அல்லது இரண்டாம் பட்சமாகக் கருதுகின்ற தேசிய விடுதலைப் போராட்டங்கள் என இவை விரியும்.
இத்தகைய பின்னணியில் சமூகங்களது வாழ்வியல் பற்றிய உரையாடல்கள் மரபுரீதியான வழக்காறுகளின் முன்னிலைப் பாத்திரம் கருத்தில் கொள்ளப்படாததாகவே நவீன அறிவுப்புலம் காணப்டுகின்றது. விளிம்புநிலை, பெண்நிலை, பின்நவீன, பின்காலனிய சிந்தனைகளின் செல்வாக்கு மேற்குறிப்பிட்ட நிலைமையில் தாக்கத்தை ஏற்படுத்துத் தொடங்கியது எனலாம். குறிப்பாக உள்ளூர் அறிவு முறைகள் ஆய்வு முறைகள் பற்றிய கோட்பாட்டு உருவாக்கங்ளும் நடைமுறை முன்னெடுப்புக்களும் மேற்படி அதிகார நிலைமையின் அடிப்படைகளை கேள்விக்குள்ளாக்கி இருக்கின்றன.
உள்ளுர் அறிவு முறைகள், ஆய்வு முறைகள் என்பன மரபுரீதியான உள்ளூர் வழக்காறுகளுள் நின்றியங்குபவை. அவற்றை மூடநம்பிக்கைகளாகவும் விஞ்ஞானபூர்வமற்றவையாகவும் காலனித்துவம் திணித்துவிட்ட நவீன அறிவுமுறை கட்டமைத்து வைத்தும் வலுப்படுத்தியும் வருகின்றது. இந்நெறிமுறை ஆக்கத்தின் அறிவுசார் இயங்கு தளங்களாக காலனித்துவ முகவர் கட்டமைப்புகளாக இயங்கிவரும் பாடசாலைகளும் பல்கலைக்கழகங்களும் இருந்து வருகின்றன. பல்கலைக்கழகங்களின் நிர்வாக ரீதியான சுயாதீனம் பற்றிய உரையாடல்கள் காணப்படினும் அதன் கல்வி முறையின் சுயாதீனம் பற்றிய கேள்விக்குட்படுத்தல்கள் மிகவும் அரிதாகவே காணப்பகின்றன. மாறாக பல்தேசிய நிறுவனங்களின் உலகமயமாக்கல் வேலைத்திட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் வகையிலேயே பல்கலைக்கழகங்கள் தகவமைக்கப்பட்டு வருவதைக் காணமுடிகிறது. இதற்கெதிரான உலகந்தழுவிய மாணவர், மக்கள் அமைப்புக்களின் எதிர்ப்புக்களும் வலுப்பெற்று வருகின்றன.
இச்சூழ்நிலையில் மரபுச்சூழலின் மக்கள் வழக்காறுகள் பற்றிய உரையாடல்கள் தாராளமயப் பொருளாதார கோட்பாடுகளால் கொண்டு நடத்தப்படும் உலகமயமாக்கல் சூழலில் எத்தன்மை கொண்டவையாக இருக்கும் என்பது ஆச்சரியம் தருவதாகும்.
1940களிலேயே மரபுச்சூழலின் மக்கள் வழக்காறுகள் பற்றிய உரத்த உரையாடல்கள் ஈழச்சூழலில் பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை, பண்பாட்டு அரசியல் செயற்பாட்டாளர் சி.வி.வேலுபிள்ளை ஆகியோரால் தொடங்கப்பட்டிருப்பதை அவதானிக்க முடியும். ஆயினும் 1990களின் பிற்கூற்றில் உள்ளூர் அறிவுத்திறன் செயற்பாடுகளுக்கான செயல்வாதங்கள் முன்னெடுக்கும் காலப்பகுதிவரை மரபு ரீதியான வழக்காறுகள் தாழ்வாரத்திற்குரிய விடயமாகவே இருந்து வந்திருக்கின்றது.
'மரபுச்சூழலில் மக்கள் வழக்காறுகளும் நிகழ்த்துதல்களும்' நூல் தமிழகச் சூழலை மையப்படுத்திய ஆய்வாக இருப்பினும் ஈழச்சூழலின் சமூகப்பண்பாட்டு வரலாற்றுப் பின்னணியை துலங்கச் செய்வதாக இருக்கின்றது.
மரபுச்சூழலில் மக்கள் வழக்காறுகளும் நிகழ்த்துதல்களும் வெறும் படியெடுப்புக்களுக்கு, ஆவணப்படுத்தல்களுக்கு கலை வாணிபத்திற்கும் உரியவை அல்ல என்பதும் அவை மக்களது வாழ்வியலை உருவாக்குவதற்கென மக்களால் முன்னெடுக்கப்படுகின்ற இயங்குதளங்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
மரபுச் சூழலில் மக்கள் வழக்காறுகளும் ஆற்றுகைகளும் பற்றிய பார்வையில் ஐரோப்பிய காலனியம் திரிபை எற்படுத்தி விட்டிருக்க சமஸ்கிருதமயமாக்கம் உட்புகுந்திருந்து முகம் மாற்றும் வேலையைச் செய்திருப்பதை கண்டு கொள்ள முடியும்.
இந்நிலையில் மக்கள் வழக்காறும் நிகழ்த்துதல்களும் சமூக உருவாக்கங்ளுக்கான சமாந்தரமான இயங்கு தளங்களாக முன்னெடுக்கப்படுவதன் தேவையையும் அதன்போது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவையும் பற்றியதான விழிப்புணர்வு அவசியமாகின்றது.
'
இந்நிலையில் மக்கள் வழக்காறும் நிகழ்த்துதல்களும் சமூக உருவாக்கங்ளுக்கான சமாந்தரமான இயங்கு தளங்களாக முன்னெடுக்கப்படுவதன் தேவையையும் அதன்போது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவையும் பற்றியதான விழிப்புணர்வு அவசியமாகின்றது.
'
மரபுச் கூழலில் மக்கள் வழக்காறுகளும் நிகழ்த்துதல்களும்' நூல் மேற்படி விடயங்கள் தொடர்பான உரையாடல்களுக்கு வழிதிறந்து விடுவதுடன் வழக்காறுகள் நிகழ்த்துதல்கள் பற்றிய ஈழத்து நிலவரங்கள் தொடர்பான மதிப்பீடுகளுக்கும் வழிகோருவதாக இருக்கின்றது.
கலைமகளது ஆய்வாக அமையும் இந்நூல் மக்கள் வழக்காறுகள் நிகழ்த்துதல்கள் என்பவை ஆய்வறிவுச் சூழலின் தாழ்வாரத்து விடயங்கள் அல்ல. அவை தனித்த கற்கை என்பதுடன் பல்வேறு கற்கைகளது அடிப்படைகளை வழங்கவல்லது என்பதையும் புரிந்து கொள்ள வைத்திருக்கிறது.
இந்நூல் தொட்டு ஈழத்து நடப்புகள் முன்னெடுப்புகள் மீதான மதிப்பீடுகளின் உரத்த வருகை ஆதிக்க நீக்கம் பெற்ற சமூகங்களின் உருவாக்கங்களிற்கான அறிவுமுறைகளின் வருகையை உத்வேகப்படுத்துவதாக இருக்கும்.
கலாநிதி சி.ஜெயசங்கர்,
நுண்கலைத் துறை,
கிழக்குப் பல்கலைக் கழகம்.
நுண்கலைத் துறை,
கிழக்குப் பல்கலைக் கழகம்.














