மட்டுநகரில் கோலாகலமாக நடைபெற்ற கால்பந்தாட்டப் போட்டியும் பரிசளிப்பு விழாவும்


மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்டச் சங்கத்தின் ஏற்பாட்டில் பாடசாலை கால்பந்தாட்டச் சுற்றுப் போட்டிகளின் இறுதிப் போட்டியும், மற்றும் 2015 சுப்பர் லீக் போட்டிகளின் பரிசளிப்பு விழாவும் நேற்றைய தினம் மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்டச் சங்கத் தலைவர் சூ.உதயராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு இலங்கை கால்பந்தாட்டச் சங்கத்தின் தலைவர் திரு அனுர டி சில்வா அவர்கள் பிரதம அதிதியாகவும் மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன்;, மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும், மண்முனை வடக்கு கோட்டக் கல்வி அதிகாரி அ.சுகுமாரன், உடற்கல்விப் பணிப்பாளர் வி.லவகுமார், அம்பாறை மாவட்ட விளையாட்டு அதிகாரி வே.ஈஸ்பரன், அதிபர் எஸ்.சுந்தரமோகன் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் வருகை தந்திருந்தார்கள்.

பிற்பகல் 3:30 மணிக்கு மெதடிஸ்த மத்திய கல்லூரி பாண்ட் வாத்தியக் குழுவினரின் இசையுடன் அதிதிகள் வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து கொடியேற்றல் வைபவம் இடம்பெற்றது அதன் பின்னர் மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்டச் சங்கத்தின் நிருவாகச் செயலாளரால் வரவேற்புரையும், மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்டச் சங்கத்தலைவரால் தலைமையுரையும் நிகழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து 2015 சுப்பர் லீக் போட்டியில் முதலிரு இடங்களையும் பெற்றுக் கொண்ட ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி கழக அணிக்கும் மட்டக்களப்பு சீலாமுனை யங்ஸ்டார் கழக அணிக்கும் இடையிலான 20 நிமிட கண்காட்சி கால்பந்தாட்டப் போட்டி நடத்தப்பட்டது. இக்கண்காட்சிப் போட்டியில் சீலாமுனை யங்ஸ்டார் அணியினர் 01 பேறினைப் பெற்று வெற்றி பெற்றார்கள்.

இதையடுத்து 2015 ஆம் ஆண்டிற்காக மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்டச் சங்கமும் மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகமும் இணைந்து நடத்திய மண்முனை வடக்கு கல்விக் கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான 17 வயதுப் பிரிவனருக்கான கால் பந்தாட்டச் சுற்றுப் போட்டிகளின் மாபெரும் இறுதிப் போட்டி சிறப்பாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இப்போட்டியில் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி அணியும் அமிர்தகழி ஸ்ரீ சித்தி வினாயகர் வித்தியாலய அணியும் மைதானத்திற்குள் அணிவகுத்துச் சென்று நிற்க பாடசாலை கீதங்கள் இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து அதிதிகளுக்கு வீரர்களை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பின்னர் பி.ப 4:30 மணியளவில் இறுதிப் போட்டி ஆரம்பிக்கப்பட்டது. போட்டி ஆரம்பமாகி முதல் பாதி ஆட்டத்தின் போது அமிர்தகழி ஸ்ரீ சித்தி வினாயகர் வித்தியாலய அணியின் தலைவர் சிறப்பான பேறு ஒன்றினைப் போட போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது.

போட்டியின் இடைவேளையின் போது மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்டச் சங்கத்தின் சுற்றுப் போட்டிச் சிறப்பு மலர் வெளியீடும், கல்லடி முகத்துவாரம் விபுலானந்தா வித்தியாலய மாணவர்களின் சம்பா இசை நிகழ்ச்சியும் நடைபெற்றதைத் தொடர்ந்து மீண்டும் பாதி ஆட்டம் ஆரம்பமாகியது போட்டியின் கடைசி நிமிடம் வரையும் 1:0 எனும் பேறு நிலைப்படி போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று நிறைவடைந்ததால் இச்சுற்றுப் போட்டியில் அமிர்தகழி ஸ்ரீ சித்தி வினாயகர் வித்தியாலய அணி 2015 பாடசாலை கால்பந்தாட்டத்தின் சம்பியன் அணியாகத் தெரிவாகியது.

இறுதிப் போட்டி நிறைவடைந்ததும் விசேடமாக அமைக்கப்பட்ட பரிசளிப்பு மேடையில் சிறப்பு அதிதிகளின் உரையும், பிரதம அதிதியின் உரையும் நிகழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து பரிசளிப்பு வைபவம் நடைபெற்றது. முதலாவதாக 2015 சுப்பர் லீக் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கான பதக்கம் அணிவித்தல், கிண்ணம் வழங்குதல் வைபவம் நடத்தப்பட்டது. இதில் முதலாமிடத்திற்கான பரிசை ஏறாவூர் வை.எஸ.எஸ்.சி அணியினரும், இரண்டாமிடத்திற்கான பரிசை சீலாமுனை யங்ஸ்டார் அணியினரும் பெற்றுக் கொண்டார்கள். இத்துடன் 2015 ஏ பிரிவு போட்டிகளின் படி சிறந்த விளையாட்டு வீரராக ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி கழகத்தின் முன்னணி வீரர் ஏ.சி.எம்.அஃனாப் அவர்களும், சிறந்த கோல் காப்பாளராக சீலாமுனை யங்ஸ்டார் கழகத்தின் வீரர் தே.சுதர்சன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டு அதற்கான விருதுகளைப் பெற்றுக் கொண்டார்கள்.

அடுத்து பாடசாலை கால்பந்தாட்டத்திற்கான பரிசளிப்பு நடைபெற்றது. பாடசாலை மட்டக் கால் பந்தாட்டத்தில் சிறந்த வீரராக அமிர்தகழி ஸ்ரீ சித்தி வினாயகர் வித்தியாலய அணியின் தலைவர் எஸ்.ருசாந்தன் அவர்களும், சிறந்த கோல் காப்பாளராக மெதடிஸ்த மத்திய கல்லூரி அணியின் வீரர் ரி.தபேசன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டு விருதுகளைப் பெற்றுக் கொண்டார்கள், பாடசாலை கால்பந்தாட்டத்தில் இறுதியாட்டத்திற்குத் தெரிவான பாடசாலைகளுக்கு இலங்கை கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவர் ரஞ்சித் ரொட்ரிகோ அவர்களால் அன்பளிப்புச் செய்யப்பட்ட சீருடைத் தொகுதிகள் வழங்கப்பட்டதுடன், பரிசுகளும் வழங்கப்பட்டன.

பாடசாலைப் போட்டிகளில் 

முதலாமிடம் - அமிர்தகழி ஸ்ரீ சித்தி வினாயகர் வித்தியாலய அணி
இரண்டாமிடம் - மெதடிஸ்த மத்திய கல்லூரி அணி
மூன்றாமிடம் - புனித மிக்கேல் கல்லூரி அணி
நான்காமிடம் - கல்லடி விபுலானந்த வித்தியாலய அணி