பாவற்கொடிச்சேனையில் காட்டுயானை அட்டகாசம்

(வரதன்)
 மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாவற்கொடிச்சேனை கண்ணகி நகர் பிரதேசத்தில் நேற்று  இரவு காட்டு யானைகள் தாக்கியதில் 3 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் 4 பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர்

பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சென்று பார்வையிட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.துரைரெட்ணம்  அவர்களது இருப்பிட உணவு உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டதுடன் அதிகாரிகளுடனும் தகவல் வழங்கி வாழ்வாதாரத்தினை ஏற்படுத்த ஆவண செய்தார்.

தொடர்அடை மழையினால் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ள தமக்கு காட்டு யானைகளின் தொல்லைகளும் அட்டகாசங்களும் தொடர்ந்த வண்ணமுள்ளன. இவற்றுக்கு அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் எதுவித நடவடிக்கைகளும் எடுக்காமலிருப்பது எமக்கு மிகுந்த வேதனையளிக்கின்றது.

சம்மந்தப்பட்டவர்கள் காட்டுயானைகளை எமது கிராமங்களுக்குள் வருவதைத் தடுக்காமலிருந்தால் எமது பாதிப்புக்கள் அதிகரித்துக் கொண்டே செல்லும்.எனவே  சம்மந்தப்பட்டவர்கள் காட்டுயானைகள் எமது கிராமங்களுக்குள் ஊடுருவுவதை தடுக்க முன்வர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.