ஆலையடிவேம்பில் வறிய மாணவர்களுக்குப் பாதணிகள் அன்பளிப்பாக வழங்கிவைப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் அம்பாறை மாவட்டத் தமிழ்ப் பிரதேசங்களுக்கான செயலகம் ஏற்பாடு செய்திருந்த ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வறுமைக்கோட்டின்கீழ் வாழும் பாடசாலை மாணவர்களுக்குப் பாதணிகளை அன்பளிப்பாக வழங்கும் வைபவம் இன்று (12) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

ஆரம்பக் கைத்தொழில்கள் அமைச்சர் தயா கமகே மற்றும் பெற்றோலிய வளங்கள் பிரதியமைச்சர் திருமதி. அனோமா கமகே ஆகியோரின் ஆலையடிவேம்பு பிரதேசத்துக்கான இணைப்பாளரும், ஐக்கிய தேசியக் கட்சியின் ஆலையடிவேம்பு பிரதேச அமைப்பாளருமான ரி.ஜெயாகர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்குப் பிரதம அதிதியாக தயா கூட்டு நிறுவனங்களின் முகாமைத்துவப் பணிப்பாளரும் ஆரம்பக் கைத்தொழில்கள் அமைச்சர் மற்றும் பெற்றோலிய வளங்கள் பிரதியமைச்சரின் புதல்வருமான சமிந்த கமகே வருகைதந்ததுடன், விசேட அதிதியாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசனும், சிறப்பு அதிதிகளாக திருக்கோவில் வலயக்கல்விப் பணிமனையின் உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.இராசமாணிக்கம் மற்றும் அமைச்சர் தயா கமகே மற்றும் பிரதியமைச்சர் திருமதி. அனோமா கமகே ஆகியோரின் அம்பாறை மாவட்டத் தமிழ்ப் பிரதேசங்களுக்கான இணைப்பாளரான வி.வினோகாந்த் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வின் ஆரம்பத்தில் அண்மையில் மறைந்த சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் இணைப்பாளரும், கொழும்பு, கோட்டே ஸ்ரீ நாகவிகாரையின் விகாராதிபதியுமான சங்கைக்குரிய மாதுலுவாவே சோபித தேரருக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வுகளில் பேசிய பிரதேச செயலாளர் ஜெகதீசன், அமைச்சர் தயா கமகே மற்றும் பெற்றோலிய வளங்கள் பிரதியமைச்சர் திருமதி. அனோமா கமகே ஆகியோரால் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வாழும் தமிழ் இளைஞர், யுவதிகளுக்குத் தமது வணிக நிறுவனங்களில் குறிப்பிடத்தக்க அளவில் தொடர்ச்சியாக வழங்கப்பட்டுவரும் வேலைவாய்ப்புகள் குறித்துப் பேசியதுடன், அவரைத் தொடர்ந்து உரையாற்றிய தயா கூட்டு நிறுவனங்களின் முகாமைத்துவப் பணிப்பாளர் சமிந்த கமகே, தான் இந்த அன்பளிப்புகளை வழங்கிவைப்பதற்குத் தன்னை வலியுறுத்திய ஐக்கிய தேசியக் கட்சியின் ஆலையடிவேம்பு பிரதேச முக்கியஸ்தர்களின் சேவைகளைப் பாராட்டியதுடன், எதிர்வரும் சில நாட்களில் இதுபோன்று மேலும் 500 காலணிகளை இப்பிரதேச மாணவர்களுக்கு அன்பளிப்புச் செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அடுத்து தமது பாடசாலை அதிபர்களுடன் வருகைதந்திருந்த அன்னை சாரதா கலவன் பாடசாலை, கண்ணகிபுரம் கண்ணகி வித்தியாலயம் மற்றும் அளிக்கம்பை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ஆகியவற்றின் மாணவர்களுக்கு அதிதிகளால் பாதணிகள் அன்பளிப்பாக வழங்கிவைக்கப்பட்டன.