மட்டக்களப்பில் மருத்துவச் சான்றிதழைப் பெற இரவு முழுவதும் பெண்களும் ஆண்களும் வீதியில் தங்கியிருந்தே பெறவேண்டியுள்ள அவலம்

மட்டகளப்பு நகரில் சாரதி அனுமதிப்பத்திரத்தினைப் பெறுவதற்கான மருத்துவ சான்றிதழை வழங்கும், கல்லடி பிரதான வீதியில் உள்ள தேசியப் போக்குவரத்து வைத்திய நிறுவகத்தில் சான்றிதழைப் பெறுவதற்கு தினமும் அனுபவித்து வரும் இன்னல்களை அரசியல் வாதிகளோ,  அதிகாரம் படைத்தவர்களோ இன்னும் கவனம் செலுத்தாமையை இட்டு மக்கள் மிகுந்த கவலை தெரிவிக்கின்றனர்.

அண்மைக்காலமாக மருத்துவ சான்றிதழ்  பெறுவதற்கு  குறித்த நிறுவகத்திற்க்கு முன்  வீதி ஓரமாக முதல் நாள் பி.ப 4:00 மணியில் இருந்து, மறுநாள் காலை அலுவலகம் திறக்கும் மு.ப 8:00  மணி வரையில் ஆண்களும், பெண்களும்   குறித்த சான்றிதழை பெறுவதற்குரிய  சீட்டுக்களை ( டோக்கன்கள் )  பெற்றுக்கொள்ள மலசலகூட வசதி உட்பட எதுவித வசதிகளும் இல்லாத வகையில் பெரும் சிரமத்தை அனுபவித்து வருவதை இரவு நேரத்தில் அவ்விடத்திற்கு வருகைதரும்  அனைவராலும் இவ் அவல நிலையை அவதானிக்க முடிகிறது.

நமது மக்கள் இவ்வாறாக   வீதியோரத்தில் குறிப்பாக இளம் சமுதாயத்தினர், இவ்விதம் சாரதிப் பத்திரம் பெறுவதற்காக இன்னல் படுவதை இனியாவது முடிவுக்கு கொண்டுவர குறிப்பாக தமிழ் அரசியல் வாதிகள் மற்றும் அதிகாரம் படைத்தவர்கள் பேச்சளவில் அனுதாபம் காட்டுவதை   விடுத்து, செயல் உருவில் தன்மானம் காக்க முன்வர வேண்டும் என்பது முற்போக்குள்ள சமுதாயத்தின் வேண்டுகோளாகும்.

இந்த அவல நிலை தொடர்பாக குறித்த நிறுவகத்தில் கொழும்பில் உள்ள தலைமைக் காரியாலயத்தில் உயர் அதிகாரிகளிடம் வினவிய போது , இவ்வாறான நிலை மட்டக்களப்பில் நடை பெறுவது தமக்கு தெரியாது என்றும், ஊடகங்கள் அறிவித்தமையினாலேயே அறிய முடிகின்றதென்றும் தெரிவித்தனர்.

இது தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு  பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரிடம் தெரிவித்திருந்தோம்  இதுவரை யாரும் சம்பவ இடத்திற்கு சென்று பார்க்கவில்லை என்ன செய்கிறார்கள் என பார்ப்போம் .