எல்லா மக்களும் இணைந்து வாழக்கூடிய ஒரு நடைமுறைக்காக நாம் ஒத்திகை பார்த்துக் கொண்டிருக்கின்றோம் !

(மோகன்)
இந்த நாட்டில் ஒரு சிறப்பான அரசியலை, இந்த நாட்டில் உள்ள எல்லா மக்களும் இணைந்து வாழக் கூடிய ஒரு நடைமுறையை உருவாக்கிட முடியுமா என்று நாம் தற்போது ஒத்திகை பார்த்துக் கொண்டிருக்கின்றோம் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய துரைராசசிங்கம் தெரிவித்தார்.

கடந்த திங்கட் கிழமை குருமண்வெளி இளவரசி சீர்பாததேவி பாலர் பாடசாலை சிறுவர்களுக்கு அமைச்சரின் நிதி ஒதுக்கீட்டில் சீருடைகள், புத்தகப் பைகள் என்பன வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் நடராசா மற்றும் வலயக் கல்வி உத்தியோகஸ்தர், பாலர் பாடசாலைகளுக்கான அலுவலகர், கிராம சேவை உத்தியோகஸ்தர் மாணவர்கள் பெற்றோர்கள் பிரதேசப் பிரமுகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாலர் பாடசாலைகள் என்பது கல்வியின் அடிப்படையான அத்திவாரமாக அமைகின்றன. ஆனால் இன்னும் இந்த விடயம் அரசு மட்டத்தில் பெரிதளவில் உணரப்படவில்லை இதன் காரணமாகத்தான் இந்தப் பாலர் பாடசாலைகள் எல்லாம் வெறுமனே தனியார் பாடசாலைகளாக இருக்க வேண்டிய அவல நிலை இருக்கின்றது.

உண்மையில் குழந்தைகளை பாடசாலைகளுக்கு ஆயத்தப்படுத்திக் கொடுக்கின்ற மிக முக்கியமான பணியை இந்தப் பாலர் பாடசாலைகள் மேற்கொண்டு வருகின்றன.

வெளிநாடுகளில் எல்லாம் இந்தப் பாலர் பாடசாலைகளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. கல்வியின் முக்கியத்துவம் அது ஆரம்பிக்கப்படும் இடத்திலே தான் இருக்கின்றது. குழந்தைகள் ஒரு நாட்டிற்கு மிகவும் முக்கியமானவர்கள் என்பதை உணர்த்தும் இடமாக இந்தப் பாலர் பாடசாலைகள் திகழ்கின்றன.

எமது நாட்டுக்கு சுதந்திரம் பெற்ற நாளில் இருந்து கோணல்மாணலான சிந்தனை கொண்டவர்கள் இந்த நாட்டை வழிநடத்தியதன் காரணமாக இன்னும் நாம் முன்னேற முடியாதவர்களாகவும். எமது முன்பள்ளிகளை வெறுமனே சிறுபிள்ளைகள் செல்கின்ற பள்ளிகளாகக் கற்பனை செய்கின்றவர்களாகவே இருக்கின்றோம்.

இது மாற வேண்டும் என்பதற்காகத் தான் புதிய அத்தியாயம் இன்று புரட்டப்பட்டிருக்கின்றது. அந்தப் புதிய அத்தியாயத்திலே தமிழர்களும், தமிழ் பேசும் மக்களும், அவர்களைத் தலைமை தாங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாங்களும் தற்போது ஒத்திகை பார்;த்துக் கொண்டிருக்கின்றோம். இந்த நாட்டில் ஒரு சிறப்பான அரசியலை இந்த நாட்டில் உள்ள எல்லா மக்களும் இணைந்து வாழக் கூடிய ஒரு நடைமுறையை உருவாக்கிட முடியுமா என்று.

எல்லாவற்றிற்கும் நாம் அரசாங்கத்தையோ வேறு நிறுவனங்களையோ எதிர்பார்க்கத் தேவையில்லை நாம் முயன்றால் எதையும் செய்து விடலாம் அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்பது போல நாம் ஒற்றுமையாக இருந்தால் அனைத்து விடயங்களையும் சாதித்து விடலாம்.

நாங்கள் எங்களுடைய சுயத்தை உணர்ந்து எங்களுடைய பலத்தை உணர்ந்து எங்களுடைய பெறுமதியை உணர்ந்து நாங்களே சில வேலைகளைச் செய்யத் தொடங்கினோம் என்றால் எமது ஒவ்வொரு கிராமங்களும் அதன் சொந்தக் காலில் நிற்க முடியும்.

நாங்கள் வெறுமனே குடிப்பரம்பலை மாத்திரம் அதிகரித்துக் கொண்டு செல்வது என்பது எவ்வளவிற்கு சரி என்று நான் கூறவில்லை ஆனால் நாம் பெற்றெடுக்கும் ஒவ்வொரு பிள்ளைகளையும் அறிவாளிகளாகவும் தைரியசாலிகளாகவும் வீரர்களாகவும் ஆக்குவதன் மூலம் நாம் எமது சமுதாயத்திற்குப் மிகப்பெரிய பங்கினை ஆக்க முடியும் என்று தெரிவித்தார்.