எதிர்காலத்தில் பெரும் இழப்புக்களையும் அழிவுகளையும் நாம் சந்திக்க வேண்டியேற்படலாம்

அனர்த்த முகாமைத்துவ குழுவினதும் அதன் உபகுழுக்களினதும் கிராம மக்களினதும் அவசரநேர செயற்பாடுகளை மதிப்பீடு செய்வதற்கும் அச்செயற்பாடுகளில் காணப்படும் குறைநிறைகளைக் கண்டறிந்து அவற்றை மேம்படுத்தவும் திருத்தவும்  அனர்த்த ஒத்திகை மிகவும் அவசியமான ஒன்று எனவும் இத்தகைய ஒத்திகை நிகழ்வுகள் குறிப்பிட்ட காலத்துக்கொருமுறை நிச்சயம் நடாத்தப்படல் வேண்டும் அவ்வாறு நிகழ்த்தப்பட்டு அதனூடாக அவசர நேர செயற்பாடுகளில் மக்கள் தொடர்ச்சியாக பயிற்றப்படுவார்களானால் எதிர்காலங்களில் ஏற்படக்கூடிய பெருமளவு அழிவுகளை நம்மால் தவிர்த்துக் கொள்ள முடியும் இல்லையேல் எதிர்காலத்தில் பெருமளவு அழிவுகளையும் இழப்புக்களையும் நாம் சந்திக்க வேண்டியேற்படலாம் என இலங்கை செஞ்சிலுவைச் சங்க மட்டக்களப்பு மாவட்டக் கிளைத் தலைவர் த.வசந்தராஜா  மண்முனை மேற்குப் பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள பத்தொன்பது கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் ஒக்ஸ்பாம் நிறுவனத்தின் அனுசரணையுடன் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அனர்த்த ஆபத்துக் குறைப்புத் திட்டத்தின் ஒரு கட்டமாக கன்னங்குடா கிராமத்தில் வெள்ளம் தாக்கும் பகுதியில் வாழும் மக்களிடையே அனர்த்த ஆபத்துக் குறைப்பு இயலுமையை அதிகரிக்குமுகமாக நடாத்தப்பட்ட வெள்ள அனர்த்த ஒத்திகை நிகழ்வினை முடித்து வைத்துப் பேசிய போது குறிப்பிட்டார்.

மேலும் தெரிவித்த அவர்

இக்கிராமத்தின் அனர்த்த முகாமைத்துவக் குழுவினதும் மக்களினதும் அனர்த்த நேர செயற்பாட்டுக்கான நடவடிக்கைகளை பலப்படுத்த முடியுமானால் அதாவது அனர்த்தத்துக்கு முகம் கொடுக்கும் ஆற்றலை மக்களிடையே அதிகரிக்க முடியுமானால் அம்மக்களது வெள்ளப்பாதிப்புக்களையும் அசௌகரியங்களையும் இயலுமானவரை குறைத்துக் கொள்ள முடியும் என்றார்.

கிராமத்தின் அனர்த்த முகாமைத்துவ குழுவின் தலைவரும் கிராம உத்தியோகத்தருமான எஸ். சுதாகரனின் தலைமையில்  இடம்பெற்ற இந் நிகழ்வில் கிராம பொதுமக்கள், கிராமத் தலைவர்கள், கிராம உத்தியோகத்தர் மற்றும் வவுனதீவு பொலிஸ் அதிகாரி எஸ் புண்ணியகுமார் முதலானோர் கலந்து கொண்டிருந்தனர்.