வவுணதீவு பிரதேசத்தில் பால்நிலை வன்முறைகளுக்கெதிரான விழிப்பணர்வு நிகழ்வு

(சுகிவர்ணன்)
மண்முனை மேற்கு பிரதேச செயலகமும் காவியா நிறுவனமும் இணைந்து, பால்நிலை வன்முறைகளுக்கெதிரான செயற்பாட்டு நிகழ்வு மண்முனை மேற்கு பிரதேசத்தில் இன்று செவ்வாய்கிழமை  இடம்பெற்றது.

மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் தலைமையில் மேற்படி நிகழ்வு நடைபெற்றது.

வவுணதீவு சந்தியில் ஆரம்பமான இந் நிகழ்வு ஊர்வலமாக மண்முனை மேற்கு பிரதேச செயலகம்வரை சென்று அங்கு ஏனைய நிகழ்வுகளுடன் நிறைவடைந்தது.

பால்நிலை வன்முறைகளுக்கெதிரான 16 நாள் செயற்பாட்டு செயல்வாத நடவடிக்கை நவம்பர் 25ம் திகதி தொடக்கம் டிசம்பர் 10ம் திகதிவரை தொடர்கின்றது.


இதன் அடிப்படையில், இச் செயல்வாத நிகழ்வின் மூலம் மக்கள் மத்தியில் வன்முறை என்பது எவ்வாறான விளைவுகளை சமூகத்தில் ஏற்படுத்தும் என்பதனை பிரதேச தேவைக்கேற்ப முன்னெடுக்க வேன்டும். இது உணர்வு ரீதியான மாற்றங்களை விரும்புகின்றவர்களால் மாத்திரம்தான் வன்முறையினை குறைக்கும் செயலணியில் இணைந்து செயற்பட முடியும். என்பதுதான் இச் செயற்பாட்டின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக அமைந்திருந்தது.

இந் நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்ட காவியா நிறுவனத்தின் பணிப்பாளர் திருமதி அஜித்குமார் யோகமலர் பேசுகையில்,
குடும்ப வன்முறையினை நிறுத்துவதற்கு நாம் ஒவ்வொருவரும் மனதார உணர்வுபூர்வமாக சிந்தித்து சிறந்த தீர்மானத்தை எடுக்கவேன்டும். அவ்வாறு தீர்மானம் எடுத்து செயற்பட்டால் அதுதான் நிலையான செயற்பாடாக அமையும். 

அதேவேளை அது மற்றவர்கள் கூறுவதற்காகவோ தமது சுயமரியாதை, சுயலாபத்துக்காகவோ  வன்முறையை நிறுத்துவோம் என தீர்மானம் எடுத்தால் அது நிலையான செயற்பாடாக அமையாது. இவ் விடயம் தொடர்பாக ஒவ்வொருவரும் சிந்திக்கவேன்டும். 

இன்றைய இச் செயற்பாட்டு வாதம் ஒரு நிகழ்வு அல்ல இது சிறந்த மாற்றங்களை ஏற்படுத்தும் செயற்பாடு என்றுதான் சொல்லவேன்டும். 

நமக்குள் நல்ல சிந்தனைகள் உருவாக வேன்டும், அதே போல் நல்ல தீர்மானங்களை எடுக்கவேன்டும்.
என தெரிவித்தார்.

இதன்போது மண்முனை வடக்கு பிரதேச வானம்பாடிகள் கலைக்கழகத்தின் வீதிநாடகங்கள், குழுபாடல்கள் உட்பட பல நிகழ்வுகள் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு,காவியா நிறுவனத்தின் பணிப்பாளர் திருமதி அ.யோகமலர், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய அதிகாரிகள், வவுணதீவு பொலீஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.