கல்லாறு மத்திய விளையாட்டுக் கழகத்தின் பிரமாண்டமான 8வது ஆண்டு நிறைவு விழா

(ரவிப்ரியா)
வருடம் ஒரு தடவை வீசும் கல்வி வசந்தமாக, கல்லாறு மத்திய விளையாட்டுக் கழகத்தின்  8வது ஆண்டு நிறைவு விழா இம் முறையும் களைகட்டத் தவறவில்லை. உரிய நேரத்திற்கு அதிதிகளை பிரதான வீதியூடாக பாண்டு வாத்தியம் முழங்க, மாணவர்கள் அணிவகுத்துவர,   அங்கத்தவர்களின் இரு வார கடின உழைப்பில் சிக்கனமான முறையில் அமைக்கப்பட்ட கலை நுட்பங்களோடு கூடிய அலங்கார மேடையைப் பார்த்து அனைவருமே அசந்து நிற்க, அற்புதமாக விழா ஆரம்பித்தது.

கழகத்தின் ஆஸ்தான தலைவர் அ.அகிலன் தலைமையில் மங்கல விளக்கேற்றல்,  அங்கத்தவர்களின் சத்தியப் பிரமாணம் என்பவற்றைத் தொடர்ந்து ஒவ்வொரு நிகழ்வும் இதயத்தை வருடிச் சென்றதுது.
பிரதம விருந்தினர்களாக இடம் பிடித்தவர்கள் இருவர். அதிலும் முதல்வராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மண்ணின் மைந்தன் பொன் செல்வராசா இடம் பிடித்திருந்தது கழகத்தின் நன்றியுணர்வை வெளிப்படுத்தி நின்றது.

இரண்டாவதாக இடம் பிடித்தவர் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன். ஆவரின் நன்றியுணர்வையும் பார்வையாளர்கள் பாராட்டினர்.
மாகாண சபை உறுப்பினர்களான பிரசன்னா இந்திரகுமார் மார்க்கண்டு.நடராசா ஆகிய தமிழ் தேசிய கூட்டமைப்பு மாகாண சபை உறுப்பினர்களும் அதி விசேட விருந்தினர்களாக பங்கேற்று தமிழ் தேசியத்திற்கு பெருமை சேர்த்தனர்.

பல கல்வி சார் பிரமுகர்களும், அதிகளவு பெற்றோரும் கலந்த கொண்ட மண்டபம் நிறைந்த நிகழ்வாகவும் இது அமைந்தது. கழகத்தின் தலைவர் அகிலனும் பிரதம விருந்தினர்கள் இருவரும் சேர்ந்து முன்வைத்த ஒரே கருத்து அனைவரும் அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.
அநோமோதய துண்டுப் பிரசுரம் வெளியிடுவோர் பற்றியே தங்கள் வேதனைகளை வெளியிட்டனர். ஆதாரமற்ற குற்றச் காட்டுக்களை முன்வைத்து திட்டமிட்டு வெளியிட்ட துண்டுப் பிரசுரங்கள் தேர்தல் முடிவுகளில் செல்வாக்குச் செலுத்தியதை குறிப்பிட்டு அது இலாமடைந்தவர்களால் மேற் கொள்ளப்படட திட்மிட்ட சதி என்று குறிப்பிடடனர்.

குற்றம் சொல்வோர் நேரடியாக தங்களிடம் அதற்கான விளக்கங்களை பெற்றுக் கொள்வதே நாகரீகமாகும் என்று குறிப்பிட்டனர். தாங்களும் சமூகத்திற்கு ஏதும் செய்யாமல், செய்பவர்களுக்கும் தொல்லை கொடுக்கும் சிறு கூட்டத்தால் தாம் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டதாக கழகத்தின் தலைவர் தமதுரையில் வேதனையோடு கடந்தகால கசப்பான அனுபவங்களோடு  குறிப்பிட்டார். அத்தகையோர் தங்களுக்கு உதவாவிட்டாலும் பரவாயில்லை. உபத்திரவம் கொடுக்கமால் இருப்பது பெரிய உதவியாக இருக்கும். இத்தகையோரை சமூகம் இனம் கண்டு கொள்ள வேண்டும்.

எமது கிராமத்தை குறிப்பாக கல்வியையும் விளையாட்டுத் துறையையும் கிராம மட்டத்திலிருந்து நகர மட்டத்திற்கு உயர்த்துவதற்கும், கல்வியாறு என்ற எமது கிராமத்தின் சிறப்புப் பேரை தக்க வைப்பதற்காகவுமே நாம் போராடிக் கொண்டிருக்கின்றோம். அதில் நாம் படிப்படியாக எமது இலக்குகளை அடைந்து கொண்டும் இருக்கின்றோம். தற்போது விளையாட்டை விட கல்விக்கே முன்னுரிமை அளித்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். இந் நிலையில் எமது முயற்சிகளுக்கு ஊறுவிளைவிக்கும் முயற்சியில் ஈடுபடுவோர் திறந்த மனதுடன் எமது தவறுகளை நேரடியாக சுட்டிக் காட்டுவதே பொருத்தமானதாகும் எனக் குறிப்பிட்டார்.

 நிகழ்வில் கலை நிகழ்வுகளும் பார்வையாளர்களை நன்கு வசப்படுத்தவே செய்தது. அதிதிகள் உரைகளும் இரத்தினச் சுருக்கமாக இருந்தது. 5ந்தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த அண்மித்த கிராமங்களைச் சேர்ந்த மாணவர்களும் இம் முறையும் உள்வாங்கப்பட்டிருப்பது சிறப்பம்சமாகும். பாடசாலைகளும் கௌரவிக்கப்பட்டது. பல்கலைக் கழகம் புகுமுக மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர். குரு பிரதீபா விருது பெற்ற ஆசிரியர் ஜெகநாதனும் கௌரவிக்கப்படதுடன், விளையாட்டுக்களில் திறமை காட்டிய கழக அங்கத்தவர்களும் கௌரவிக்கப்படடனர்.