வாழ்வாதார சுயதொழில் ஊக்குவிப்பு உதவிகள் வழங்கி வைப்பு..

கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் அவர்களின் மாகாணசபை 2015ம் ஆண்டுக்குரிய வரவு செலவுத் திட்ட நிதி ஓதுக்கீட்டின் கீழ் பயனாளிகளுக்கு வாழ்வாதார சுயதொழில் ஊக்குவிப்பு உதவி வங்கும் நிகழ்வு இன்று (11) அமைச்சரின் மட்டக்களப்பு மாவட்ட காரியாலயத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் கலந்து கொண்டதுடன் அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் தங்கவேல், அலுவலக உத்தியோகஸ்தர்கள் பயனாளிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 23 பயனாளிகளுக்கு இவ் உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன. இதன் போது தையல் இயந்திரங்கள், வாயு அடுப்புகள் மற்றும் இடியப்பம் தயாரிக்கும் பாத்திரங்கள், சோளம்பொறி தயாரிக்கும் உபகரணம், வர்ணம் பூசும் உபகரணம், மின்சார சீவுளி என பல பொருட்கள் இங்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.