ஆலையடிவேம்பில் லைசியம் பாலர் பாடசாலை அங்குரார்ப்பணம்

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கல்விச் சேவைகளை வழங்கிவரும் லைசியம் தனியார் கல்வி நிறுவனத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய பாலர் பாடசாலையான லைசியம் முன்பள்ளியின் உத்தியோகபூர்வ அங்குரார்ப்பண வைபவம் அதன் ஸ்தாபகத் தலைவரும், திருக்கோவில் வலயக் கல்விப் பணிமனையின் அழகியற்கலைப் பிரிவிற்கான உதவிக் கல்விப் பணிப்பாளருமான சுந்தரம் ஸ்ரீதரன் தலைமையில் நேற்று (19) காலை இடம்பெற்றது.

இந்நிகழ்விற்குப் பிரதம அதிதியாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசனும், விசேட அதிதியாக திருக்கோவில் கல்வி வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் என்.வரணியாவும், சிறப்பு அதிதிகளாக திருக்கோவில் கல்வி வலய ஆரம்பக்கல்வி இணைப்பாளர் எஸ்.தர்மபாலன், அக்கரைப்பற்று தொழில்நுட்பக் கல்லூரியின் விரிவுரையாளர் எம்.ரமணிதரன், அக்கரைப்பற்று விவேகானந்தா வித்தியாலய அதிபர் ரி.தவராஜா, ஆலையடிவேம்பு பிரதேச முன்பிள்ளைப்பராய அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.உஜெயந்தன் மற்றும் கிழக்கு மாகாண முன்பள்ளிக் கல்விப் பணியகத்தின் முகாமைத்துவ உதவியாளர் எம்.மோகனதாஸ் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

மாலையிடப்பட்டு சின்னஞ்சிறார்களின் அழகிய பாண்ட் வாத்திய இசையுடன் வரவேற்று அழைத்துவரப்பட்ட அதிதிகள் 18 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள குறித்த பாலர் பாடசாலையின் கல்வி நடவடிக்கைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைத்ததுடன், அம்மாணவர்களால் வழங்கப்பட்ட கலை நிகழ்வுகளையும் கண்டு மகிழ்ந்தனர்.

அங்கு அதிதிகளின் உரைகள் இடம்பெற்றதுடன், நிகழ்வின் இறுதியில் பரிசளிப்பு வைபவமும் இடம்பெற்றது.