(சிவம்)
கைத்தொழில் பயிற்சியாளர்கள் தங்கள் தொழில் வாண்மையை விருத்தி செய்வதற்காக மட்டக்களப்பு பயனியர் வீதியில் உள்ள லவன் பற்றிக் பிறின்டிங் செய்யும் தொழில் நிலையத்தில் இன்று வியாழக்கிழமை (21) பயிற்சிகளில் ஈடுபட்டனர்.
ஆடைகளில் மட்டக்களப்பின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் பாடும் மீன், வெளிச்ச வீடு, மட்டக்களப்பு கோட்டை, மட்டக்களப்பு கேட் உள்ளிட்ட மரபுரிமை மிக்க இடங்களை துணிகளில் பற்றிக் பிரின்டிங் செய்யும் செயல்முறைகளைப் பார்வையிட்டனர்.
ஓவியர் குலராஜின் கற்பனையில் உதித்த கணபதி உள்ளிட்ட சுவாமியின் உருவங்கள், கோகுல் ராதை, நடராஜரின் தாண்டவ நடனம், கண்ணன் ராதை காதலர் வடிவங்கள் உள்நாட்டு வெளிநாட்டு உல்லாசப் பிரையாணிகளைக் கவரும் கண்கவரும் உருவங்கள் மெழுகை மூலப் பொருளாகப் பயன்படுத்தும்; இரு நாள் செயல்முறைப் பயிற்சிகளிலும் ஈடுபட்டனர்.
யாழ்ப்பாண பல்கலைக் கழக கலை மற்றும் வடிவமைப்பு மாணவர்கள், கிழக்குப் பல்கலைக் கழக கலை மற்றும் தொழில் நுட்ப மாணவர்கள், ஊறணி தொழில் பயிற்சி நிலையத்தின் பயிற்சியாளர்கள் உட்பட நெசவு, மட்பாண்டம், தையல், பன் வேலை தொழில் பயிற்சியாளர்கள் 16 பேரும்,
அமெரிக்கா, சீனா, தாய்வான், இந்தோனேசியா மற்றும் துருக்கி நாடுகளின் பல்கலைக் கழகங்களில் தளபாட வடிவமைப்பு, வீட்டத் தோட்டக்கலை மற்றும் கட்டிடக்கலை, துணிகள் மற்றும் கைத்தொழில் வடிவமைப்பு பீடங்களில் கல்வி பயிலும் 18 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பங்காளதேஷ், இந்தியா, ஆபிரிக்கா, கொலம்பியா மற்றும் தென் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும் சென்று தொழில் வாண்மையை விருத்தி செய்துள்ளதாக குறித்த நாடுகளைச் சேர்ந்த பல்கலைக் கழக மாணவர்கள் குழுவின் தலைவரும் வடிவமைப்பு ஆய்வுகூட நிலையத்தின் இணைப்பணிப்பாளர் வடிவமைப்பு பேராசிரியர் எலிசபத் டீன் ஹேமன் தெரிவித்தார்.
ஆறு தடவைகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாகவும் வடக்கு கிழக்கில் உள்ள தொழில் பயிற்சியாளர்களையும் இணைத்துக் கொண்டு குறித்த பயிற்சிகளில் முன்பிருந்தே ஈடுபட்டு வருவதாகவும் இந்தப் பயணத்தில் 4 வாரங்கள் மட்டக்களப்பில் தங்கியிருந்து பல்வேறுபட்ட பயிற்சி நிலையங்களைப் பார்வையிட்டு பயிற்சிகளை வழங்கவுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.






















