மகிழவெட்டுவானில் முதலுதவிப் பயிற்சி

மகிழவெட்டுவான், கற்குடா, தில்லந்தோட்டம் என 3 கிராமங்கள் உள்ளடங்கியதே மகிழவெட்டுவான் கிராமசேவகர் பிரிவு. இப்பிரிவில் ஏறக்குறைய 550 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக்கிராமசேவர் பிரிவு வருடாவருடம் பெய்யும் பெருமழையினால்; ஆற்றுப்பெருக்கினாலும் வெள்ளப்பெருக்கினாலும் பல்வேறு வகைகளில் பாதிக்கப்படுவதுண்டு. அவ்வேளைகளில் மக்கள் நோயுறுவது விபத்துக்குட்பட்டு காயமுறுவது என்பு முறிவுக்குள்ளாவது போன்ற பல்வேறு தாக்கங்களுக்கு உட்பட்டு தகுந்த நேரத்தில் வைத்திய உதவி கிடைக்காமல் கஷ்டமுறுவது வழக்கம்.


இத்தகைய நேரங்களில் நோயுறுவோர் விபத்துக்குட்படுவோர் முதலானோரின் உயிரைப் பாதுகாப்பதற்காகவும் நோய் தீவிரமடையாமல் இருப்பதற்காகவும் நோய் விரைவில் குணமடைவதற்காகவும் முதலுவதவி அறிவு படைத்தோர் இக்கிராமத்தில் இருக்க வேண்டியதை உணர்ந்த  இப்பகுதி அனர்த்த முகாமைத்துவக் குழு உறுப்பினர்கள் இலங்கை செஞ்சிலுவைச் சங்க மட்டக்களப்பு மாவட்டகிளைத் தலைவர் த.வசந்தராஜாவிடம் முன்வைத்த கோரிக்கைக்கிணங்க இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டக் கிளையினர் ஒக்ஸ்பாம் நிறுவனத்துடன் இணைந்து இக்கிராம சேவகர் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 அனர்த்த முகாமைத்துவக் குழு உறுப்பினர்களுக்கு இருநாள் அடிப்படை முதலுதவிப் பயிற்சியை வழங்கி வைத்தனர்.

இம்முதலுதவிப் பயிற்சி இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டக் கிளையின் தலைவர் த.வசந்தராஜாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இப்பயிற்சியில் தேர்ச்சி பெறும் பயிலுனர்களுக்கு முதலுதவிச் சான்றிதழ் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.