1968 ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி அமரர் டட்லி சேனநாயக்கவின் கருத்திட்டத்தில் உப உணவுப் பயிர்ச்செய்கையை விருத்தி செய்யும் நோக்கில் இளைஞர் விவசாயத்திட்டம் கொண்டுவரப்பட்டது அதன் கீழ் வெல்லாவெளி பிரதேச செயலகப்பிரிவிற்குற்பட்ட தும்பங்கேனியில், விவசாயத்திட்டம் சுமார் 400 ஏக்கர் அளவில் பயிரிடப்பட்டு வந்தது.
ஆனால் யுத்த சூழ்நிலைகளால் மக்கள் இப்பிரதேசங்களை விட்டு இடம்பெயர்ந்ததன் காரணமாக தொடர்ந்து பயிர்ச்செய்கைகளை மேற்கொள்ள முடியாமல் தடைப்பட்டதுடன் மக்களின் வாழ்வாதாரத்திலும் அது தாக்கத்தினை செலுத்தி வந்தது..
யுத்தம் நிறைவுற்ற இக் காலப்பகுதியில் மக்கள் மீண்டும் குடியுள்ள நிலையில் தமது வாழ்வாதாரத்தினை சிந்தித்து தடைப்பட்ட குறித்த உப உணவுத்திட்டத்தினை மீண்டும் மேற்கொள்ள தமக்குரிய நீர்ப்பாசனத்திட்டத்தினை மீள் நிர்மாணம் செய்து தருமாறு தும்பங்கேனி விவசாயிகள் அங்கு விஜயம் செய்த மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அவர்களிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
தும்பங்கேனி கிராம அபிவிருத்திச்சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் சங்கார வேல் சனசமுக மண்டபத்தில் (22.02.2016) இடம்பெற்ற போதே இக் கோரிக்கையை முன்வைத்திருந்தனர்.
இதனைத்தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் இம்மக்களின் நீர் விநியோகத்தினை பூர்த்தி செய்துவந்த நோச்சியடி குளத்தினையும். அதன் வாய்க்கால் அமைப்புகளையும் நேரில் சென்று பார்வையிட்டார்.

















