மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்டச் சங்கத்திற்கான அலுவலகத்தை அமைக்க முயற்சி – முதல் கட்டப் பணிகள் ஆரம்பம்


கிழக்கு மாகாணத்தின் கால்பந்தாட்ட வரலாற்றில் மிகவும் பழமையான சங்கமாகத் திகழும் மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்டச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டு 2017 ஆம் ஆண்டுடன் 60 வருடங்கள் நிறைவடையவுள்ளது.

இப்பின்னணியில் இதுவரை ஒரு நிரந்தரமான அலுவலகத்தைக் கொண்டிராத இச்சங்கத்திற்கு ஒரு அலுவலகத்தை உருவாக்கும் முயற்சியில் சங்கத்தை நிருவகிக்கப் புதிதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் திரு.மா.உதயகுமார் அவர்களின் தலைமையிலான நிருவாகத்தினர் ஈடுபட்டு வருகின்றார்கள்.

முதற்கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண சபை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் ஆகியோரைச் சந்தித்து அவர்களூடாக உதவிகளைப் பெற்றுக் கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

இந்த வகையில் நேற்றைய தினம் (25.03.2016) மட்டுநகரிலுள்ள மேற்படி உறுப்பினர்களைச் சந்தித்து அவர்களிடம் உதவிகளைக் கோரியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட கால்பந்தாட்டத்தின் அபிவிருத்திக்கு நிலையான அலுவலகத்தின் தேவை அவசியமானது என்பது உணரப்படும் நிலையில் முதல் கட்டமாக இப்பணியில் ஈடுபடுவதாக மாநகர ஆணையாளரும், மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்டச் சங்கத்தின் தலைவருமாகிய திரு.மா.உதயகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.