மகுடம் எஸ்.பொ சிறப்பிதழ் – ஓர் பார்வை , அ.ச .பாய்வா

மட்டக்களப்பில் இருந்து கடந்த நான்கு வருடகாலமாக வெளி வந்து கொண்டிருக்கும் மகுடம் கலை இலக்கிய சமூக பண்பாட்டுக்                      காலாண்டிதழின் பத்தாவது இதழ் ஈழத்துத்  தமிழ் இலக்கியத்தின் தவிர்க்க முடியாத ஆளுமையாக கணிக்கப்படுபவரும் , முற்போக்கு இலக்கியத்திற்கு எதிராக நற்போக்கு இலக்கியம் என்ற மாற்றுச் சிந்தனைப் போக்கினை அறிமுகப் படுத்தியவருமான எஸ்.பொ சிறப்பிதழாக மலர்ந்துள்ளது.
ஈழத்திலும் தமிழா நாட்டிலும் பரவலாக அறியப் பட்ட பேராசிரியர்கள் க.கைலாசபதி,. கா. சிவத்தம்பி, எஸ்.பொ, பிரமிள், மு.தளையசிங்கம் போன்றோர்களில் எஸ்.பொ முதன்மையானவர்.முக்கியமானவர். மனிதர்களின்  பாலியல் தொடர்பான உணர்வுகளை தனது படைப்புக்களில் நேரிடையாக கையாண்டதன் மூலம் தன்னை ஒரு வித்தியாசமான , பிரச்சினைக்குரிய எழுத்தாளராக கணிக்கச் செய்தவர். எஸ்.பொ பல முரண் நிலைகளுடன் போட்டியிட்டு கடைசி வரை தனது கொள்கை வழி நின்று இலக்கியம் படைத்தவர். நற்போக்கு இலக்கியத்தின் பிதாமகராக கருதப் படும் அவருக்கு சிறப்பிதழ் வெளியிட்டதன் மூலம் மகுடம் தமிழ் இலக்கிய உலகிற்கு மற்றுமொரு மாபெரும் பங்களிப்பினை செய்துள்ளது.
ஈழத்தில் முதன் முதலாக நவீன தமிழ் இலக்கியத்தின் பிதாமகராக கருதப் படும் பிரமிள் என்கிற தர்மு சிவராமுவுக்கு சிறப்பிதழ் வெளியிட்டதன் மூலம் பிரமிள் தொடர்பாக போதுமான அறிதலும் புரிதலும் அற்றிருந்த ஈழத்து இலக்கிய உலகிற்கு அவரைப் பற்றிய ஒரு தெளிவான பார்வையை வழங்கியது மகுடமே. பல்கலைக் கழக ரீதியாக பிரமிள் தொடர்பான ஆய்வுகளை முன்னெடுக்க தூண்டுதலாய் அமைந்ததன் காரணமாக தமிழ் நாட்டிலும் மீள் பிரசுரம் பெற்றது மகுடம் .
மகுடம் இதுவரை இரண்டு முறை மலையக சிறப்பிதழ்களை வெளியிட்டுள்ளது .அதில் மலையகத்தின் இரு பெரும் கவிஞர்களான  கவிஞர் கபாலி செல்லன் ,பரமஹம்ச தாசன்  பற்றி எழுதிய பின்னரே அவர்களை மலையக இலக்கிய வாதிகள் அடையாளம் கண்டு கொண்டனர். 
தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளின் நூற்றாண்டுவிழாவை முன்னிட்டு முதன் முதல் அவருக்கு சிறப்பிதழ் வெளியிட்டதும் மகுடமே. நான்கு தலைமுறைகளைச் சேர்ந்த ஈழத்து சிறுகதை படைப்பாளிகள் பதினைந்து பேரின் சிறுகதைகளை மகுடம் சிறுகதை சிறப்பிதழ்களை வெளியிட்டதன் மூலம் பல சிறுகதை படைப்பாளிகளை மீள எழுதத் தூண்டிய பெருமையும் மகுடத்திற்கு உண்டு.
அந்த வகையில் பல் பரிமாண ஆளுமை கொண்ட எஸ்.பொ தொடர்பான,  அவரது சிறப்பியல்புகளைக்  கூறும் கட்டுரைகள் ஆய்வு ரீதியாகஇவ் இதழில் வரையப் பட்டுள்ளது.
எஸ்.பொவின் முழு மொத்த ஆளுமையையும் ஆய்வு செய்யும் பேராசிரியர் செ.யோகராசாவின் கட்டுரையும், அவரது நாவல்களை தனித்து ஆய்விற் குட்படுத்தும் கவிஞர் செங்கதிரோனின் , எஸ்.பொவின் சிறுகதைகளையும் அதில் இழையோடும் பாலியல் தொடர்பான உணர்வுகளையும் பற்றிய அ.ச. பாயாவாவின் கட்டுரையும், எஸ்பொவுக்கும் முஸ்லிம் மக்களுக்குமான தொடர்பினையும் , நல்லுறவினையும் கூறும் பீர் முகமதுவின் கட்டுரை, வரலாற்றில் வாழ்தல் என்ற நூலின் மூலம் தனிமனித சரித்திரத்தை இலக்கியமாக்கிய எஸ்.பொ பற்றி கூறும் திருமதி ரூபி வலண்டீனா பிரான்சிஸ்சின் கட்டுரையோடு குந்தவை , குப்பிளான் சண்முகன் , சாந்தன் , எஸ்.எல்.எம் ஹனிபா, பாலசுப்பிரமணியம் , ஈழவாணி என ஈழத்தின் முக்கிய படைப்பாளிகளின் எஸ்.பொ வுடனான நினைவிடை தோய்ந்த வரலாற்றுச் சம்பவங்கள் கட்டுரையாக்கப்பட்டுள்ளது.
எஸ்.பொவின் முத்திரைச்  சிறுகதையான தேர் என்ற சிறுகதையும் , நற்போக்கு ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னரும் என்ற அவரது நூலிற்கு அவர் எழுதிய முன்னுரையும், தமிழ் நாட்டில் இருந்த போது அங்கு அவர் வழங்கிய நேர்கானலின் சில பதிவுகளும் இதழை அணி சேர்க்கின்றன.
கவிஞர்கள் நிலாதமிழின் தாசன் , எஸ்.பாலமுருகன் லலித கோபன், களப் பூரான் தங்கா (கனடா ) , ஆகியோரின் கவிதைகளுடன் லண்டனில் வசிக்கும் கரவை மு .தயாளனின் அம்மாவும் பிள்ளைகளும் என்ற சிறுகதை லண்டனை கதைக் களமாகக்  கொண்டாலும் ஈழத்து தமிழர்களே கதை மாந்தர்களாக உள்ளனர். எப்படி ஈழத்தில் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரிட்சை எமது மாணவர்களை பிழிந்து எடுக்கிறதோ  அதேபோல் லண்டனி லும் ஆறாம் வகுப்பில் ஐயாயிரம் பேரில் இருந்து அறுநூறுபேரை தேர்ந்தெடுக்கும் போட்டி பரீட்சை  எவ்வாறு தமிழ் சமூகத்தினையும் பாதிக்கிறது என்பதை மிக அழகாக சொல்லும் சிறுகதை.
இவ் விதழில் எஸ்.பொவின் சகோதரரை நேர்காணல் செய்ததன் மூலம் ராகவன் பல விடயங்களை வெளிக் கொண்டு வருகிறார்.
இறுதியாக பேராசிரியர் துரை மனோகரன் அவர்கள் பேராசிரியர் க.அருணாசலம்தொடர்பாக எழுதியிருக்கும் நினைவுப் பிரதி, கடைசிப்பக்கத்தில் எஸ்.பொ மொழி பெயர்த்த ஆபிரிக்க நாவல்களின் அட்டைப் படம் , அவரது நூல் தொடர்பான விபரம் என பல விடயங்கள் உள்ளன.

மூன்று சிறுகதை, நான்கு கட்டுரை ஐந்தாறு கவிதைகள் என்ற வாய்ப்பாட் டுத் தனமான ஈழத்து சஞ்சிகை வரலாறில் இருந்து ஒவ்வொரு இதழையும் வித்தியாசமான முறையில் ஆய்வு ரீதியாகவும்,  விமர்சன பூர்வமாகவும் முரண் நிலை இலக்கியத்தை முக்கியத்துவப் படுத்தி வெளிவரும் மகுடம் ஈழத்து இதழ்களில் மகுடமாகிறது. மகுடம் தொடர்புகளுக்கு வி.மைக்கல் கொலின் (ஆசிரியர்) 90 பார் வீதி , மட்டக்களப்பு .