மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மகளிர் தின நிகழ்வு

(படுவான் பாலகன்) நிலையான எதிர்காலத்திற்கு வளமான பெண்கள் என்ற தொனிப்பொருளில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மகளிர் தின விழா இன்று(10) வியாழக்கிழமை பிரதேச கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது பெண்களுக்கான கயிறிழுத்தல், தேங்காய் துருவுதல், தென்னைஓலை இழைத்தல் போன்ற போட்டிகளும் அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது. மேலும் சிறுவர்கள், பெரியவர்களின் வரவேற்பு நடனம், குழுநடனம், நாட்டார் பாடல், தாலாட்டுப்பாடல் போன்ற நிகழ்வுகளும், பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், எதிர்காலத்தில் பெண்களுக்கு வழங்கப்பட வேண்டிய அந்தஸ்து அடங்கிய கவிதைகளும் மகளிர் அமைப்பின் பிரதிநிதிகளால் வாசிக்கப்பட்டது.

இங்கு இடம்பெற்ற சிறப்புரைகளில் பிரதேசத்தில் இடம்பெறும் இளவயது திருமணம் இதனால் பல பெண்கள் கல்வியை இழந்தவர்களாக இருப்பதாகவும், பெண்களுக்கு குடும்பங்களில் வழங்கப்பட்டுள்ள அந்தஸ்து, எதிர்காலத்தில் வழங்கப்பட வேண்டிய அந்தஸ்து தொடர்பிலும் உரையாற்றப்பட்டது.

பிரதேச செயலாளர் சத்தியானந்தி நமசிவாயம் தலைமையில் இடம்பெற்ற மகளிர் தின நிகழ்வில் பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய உதவிக்கல்விப் பணிப்பாளர் றஞ்சிதமலர் கருணாநிதி, அதிபர் யோகராணி ஞானப்பிரகாசம், அதிபர் தர்மானந்தாதேவி விஜயரெத்தினம், நியுவ் அறோவ் நிறுவனத்தின் இணைப்பாளர் ருத்திராதேவி ரவி, செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச மகளிர் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.