கூத்தரங்கு கொண்டாடி மகிழ்தலையும் கூட்டுணர்வையும் ஒன்றுகூடலையும் ஆளுமை விருத்தியயையும் தரவல்லது. அவற்றில் சிறுவர் கூத்தானது சுயமாகச் சிந்தித்து கற்றலை விரிவுபடுத்தவும் புத்திசாலித்தனமாக செயற்பட்டு ஆற்றல் திறன் விருத்தியை அடைவதற்கும் முகமைத்துவ அறிவைப் பெறவும் மகிழ்ந்து வாழ்வதற்குமான சாதனமாக உள்ளது.
மழைப்பழக் கூத்து கடந்த இரண்டு மாதங்களாக மட்டக்களப்பு கருவேப்பங்கேணியில் அம்மக்களின் பெரு விருப்பத்துடன் பதினைந்து களரிக்குமேல் அடித்து பழக்கப்படுகின்றது. இதன் உருவாக்கம் கூட்டுழைப்புடனும் கூட்டுச் செயற்பாட்டுடனும் ஆனது. இன்றைய உலகமயமாக்கற் சூழலில் தனிமனிதராக்கப்பட்ட மனிதரை ஒன்றிணைக்கும் கருவியாக பயன்படுகின்றது. இவ்வாறு பழகும் கூத்திற்கான சதங்கையணி விழாக் கொண்டாட்டம் கருவேப்பங்கேணியில் எதிர்வரும் 07.03.2016 அன்று கோலாகலமாக நடை பெறவுள்ளது.
இக்கூத்திற்கான அண்ணாவியார் சீனித்தம்பி அலெக்சாண்டர் ஆவார். மிகத்திறமையுடன் ஆடல், பாடல்களைப் பழக்கி செயற்படுகின்றார். இதற்கான கொப்பியாசிரியராக தர்மலிங்கம் முத்துலிங்கம் அவர்களும் கூத்துருவாக்கத்திற்கான இணைப்பாளராக விரிவுரையாளர் சு.சந்திரகுமார் அவர்களும் செயற்படுகின்றனர். இக்கூத்திற்கான முன்னீடுனார்கள் திருமதி தியாகராசா இராசம்மா, திரு திருமதி ஜெயங்குமார் கலாவதி, திரு தியாகராசா தயாபரன் ஆகியோர் விளங்குகின்றனர். இதில் ஆடும் சிறுவர் சிறுமியர்கள் மிகவும் திறமையுடனும் ஆற்றலுடனும் ஈடுபடுகின்றனர்.
மிகவும் அழகான ஆடலையும் பாடலையும் ஆற்றுகையாகத் தருகின்றனர். கற்றலுக்கான திறனையும் ஒத்துழைப்பையும் மதிநுட்பத்தையும் கொடுகின்றது. இக்கூத்தில் கட்டியக்காரனுக்கு கு.ஹவாஸ்கரும், பாடினிமாருக்கு ர.தனுசியா, ஜெ.யதூர்சினி, வெ.மேரிரொசானி ஆகியோரும், மதிவதனனுக்கு ந.சருக்சனனும், சுந்தரிக்கு வ.வபிலக்சனும், வேதவள்ளிக்கு ந.சதூர்சனும், அரசனுக்கு வெ.ரெ.வின்சன் டிப்போலும் மந்திரிக்கு இ.கிசோசனும் விஜயனுக்கு கு.விருவும் கிழவிக்கு கு.ஹவாஸ்கரும் அரக்கனுக்கு தி.தயாபரனும் பறையறைவோனுக்கு சு.சந்திரகுமாரும் கூத்தர்களாக ஆடுகின்றனர். இதில் ஆடும் கூத்தர்கள் அனைவரையும் இந்நிகழ்விற்க்கு வருப்படி அன்புடன் அழைக்கின்றனர்.















