கிருமிநாசினி பாவனையால் விவசாயமும், விவசாயிகளும் நோய்த்தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர்

(படுவான் பாலகன்) நாளாந்தம் நாம் உண்ணுகின்ற உணவுகள் நஞ்சு கலந்த எம்மை கொல்லக்கூடிய உணவுகளாவே இருந்து கொண்டிருக்கின்றது. ஆதிகால மக்கள் இயற்கையாகவே விவசாயத்தினை மேற்கொண்டனர். இதனால் இயற்கையும் அவர்களோடு ஒன்றிணைந்திருந்தது. இதன் பயனாக விவசாயிகளும், விவசாயமும் நோய்த்தாக்கம் இன்றி இருந்தனர்.  ஆனால் தற்காலத்தில் கிருமிநாசினிகளின் பாவனைகளால் விவசாயத்திற்கு நன்மை செய்யக்கூடிய பூச்சுகள் அழிக்கப்பட்டு விட்டதன் மூலமாக நோய் விவசாயத்தையும், விவசாயிகளையும் ஏனையவர்களையும் பீடித்திருக்கின்ற நிலை உருவாகியிருக்கின்றது. என பிரதேச செயலாளர் சத்தியானந்தி நமசிவாயம் குறிப்பிட்டார்.

உக்டா நிறுவனத்தினால் செய்கைபண்ணப்பட்ட இயற்கை விவசாய நெல் அறுவடையை  இன்று(04) வெள்ளிக்கிழமை முனைக்காடு உக்டா பண்ணையில் ஆரம்பித்து வைத்து பேசுகையில் தெரிவித்தார்.

பிரதேச செயலாளர் தொடர்ந்தும் அங்கு கூறுகையில் விவசாயிகள் மற்றவர்களுக்கு உணவு கொடுக்கின்றவர்கள். அவ்வாறு கொடுக்கின்ற உணவில்  நஞ்சு கலந்திருப்பதானது அனைவரையுமே பாதிக்கின்றது. இவற்றை நிவர்த்தி செய்வதற்கு மிகவும் பாதுகாப்பு முறையான இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. ஆகவே இதனை எல்லோரும் பின்பற்ற வேண்டும். இதன் மூலம் நாமும் , மற்றோரும் பாதுகாப்பான உணவுகளை உண்ண முடியும். இதனால் பிற்கால சந்ததியை ஆரோக்கியமிக்க சந்ததியாக உருவாக்க முடியும். என்றார்.