இதன் அழகியல் திறந்த வெளியில் சமுதாயம் ஒன்றிணைந்து ஊடாடி செய்து செயற்பட்டு மகிழ்ந்து கொண்டாடுவதும்; ஆடல், பாடலை மையப்படுத்துவதும் ஆகும். கூத்தரங்கின் யதார்த்த சூழலில் பயில் நிலையில் உள்ள ஆற்றுகை அழகியலை அடிப்படையாகக் கொண்டே, கூத்து கற்றல் கற்பித்தல் சூழலில் முன்னெடுக்கப்பட வேண்டும்.
கூத்தரங்கின் ஆற்றுகை அழகியலை அடிப்படையாகக் கொண்டு நுண்கலைத்துறையில் 2012 இல் கற்பிக்கப்பட்டது. இது ஆற்றுகைமையக் கற்றல் - கற்பித்தலாகவே திட்டமிடப்பட்டது. கூத்தை ஆற்றுகையினூடாகக் கற்பிக்கும்போது அண்ணாவியார் முன்னிலை பெறுவார். அதேவேளை, கற்பிக்கும் விரிவுரையாளர் பொறுப்பாசிரியராக இருந்து துணை புரிவதும் ஆற்றுகையில் இணைந்து ஆடுவதும் செயற்படுவதும் இடம்பெறும். கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத்துறையினராலேயே கூத்தரங்கின் இயல்பான வட்டக்களரியில் தொடர்செயற்பாட்டுடன் பழகி முதன்முதல் கற்பிக்கப்பட்டது. இதில் 'கண்டியரசன்' தென்மோடிக் கூத்து (3 மணித்தியாலயம்), மழைப்பழம் சிறுவர் கூத்து (2 மணித்தியாலயம்), 2015 இல் அலங்காரரூபன் தென்மோடிக்கூத்து (4 மணித்தியாலம்). போன்றவை முக்கியமானதாகும்.
அலங்காரரூபன் கூத்து சுமார் ஏழு மாதங்கள் பழக்கப்பட்டது. இதில் சட்டம் கொடுத்தல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. சட்டத்தையெடுத்த கூத்தர்கள் மீண்டும் தொடர்ச்சியாக வட்டக்களரியில் கூடி பழகி (களரியடித்து), சதங்கைகட்டு விழா கோலாகலமாக பல்கலைக்கழக சமூகம் ஒன்றிணைய நடைபெற்றது. இது பொங்கிப் படைத்து சம்பிரதாயப் பூர்வமாக நடைபெற்றது. பின்னர் தொடர்ந்து ஆற்றுகையினூடாக செயல்மையம் நின்று கற்பிக்கப்பட்டது. பழக்கப்பட்டது. கூத்தின் கதை விபரிப்பு, அதன் கட்டமைப்பு ஆற்றுகை நிலையில் அது இன்னுமொரு வடிவம் பெற்று உருவாகுவது, தொடர் செயற்பாட்டில் வெளிப்படும் பண்பாட்டு நிகழ்வுகள், அதில் சமுதாய வாழ்து கொண்டாடுதல் என்பன விபரிக்கப்பட்டன. கூத்தில் அண்ணாவியாரின் பங்கும், ஆற்றுகை வெளிப்பாடும் தெளிவுப்படுத்தப்பட்டது. கூத்துக்காக தயார்படுத்தல் காலத்தில் சமுதாயம் ஒன்று கூடி செயற்படுதல் சமகாலத்திற்கு அவசியம் எனப்பட்டது.
கூத்தர் தாங்கி ஆடும் கூத்தை (பாத்திரத்தை) செய்து காட்டும் போது மிகத்தெளிவாக செய்து காட்டும் முறை அழுத்தமாகவும் திருத்தமாகவும் கற்பிக்கப்பட்டது. சுவை தரக் கூடியவாறு பாடுதல், மெட்டுக்களை எடுக்கும் முறை, பரணி, கொச்சகம், கொச்சகத்தரு, தரு, விருத்தம், தாழிசை, உலா என்பனவும் செயல் மையம் நின்று கற்பிக்கப்பட்டன. ஆடலில் வரவுத் தாளம் அதில் வரும் ஆட்டக் கோலங்கள், பாடலின்போது வரும் ஆட்டங்கள் இதனுடனான பாத்திரவாக்கம் என்பனவும் ஆடிக்காட்டி செயற்பாட்டுடன் தெளிவாக கற்பிக்கப்பட்டது.
கூத்தரங்கின் உடுப்புக் கட்டுதல் அதன் சிறப்பு என்பன தெளிவுப்படுத்தப்பட்டன. மாணவர்களும் பொறுப்பாசிரியரும் கூத்தர்களாகினர். அக்கூத்தர்கள் எனும் பெருமிதமும், ஆர்வமும் மேலோங்கியது. ஏட்டில் கூத்துப் பற்றி கற்றவர்கள் செயற்பாட்டினூடாகவும் ஆற்றுகை நிலையிலும் கற்ற ஆற்றுகையாளர்களாக உருவாகுவது வலுப்பெற்றது. இது வாழ்நாளுக்குரிய கற்றலாகவும் நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்துவதாகவும் அமைந்தது. அரங்கவியல் மாணவர்களுக்கான பல்வகைமை பயிற்சிகளும் இந்த ஆற்றுகை மையக் கற்றலினூடாக வெளிப்பட்டது. மாணவர்கள் மத்தியில் கூட்டுருவாக்கம், அறிவு, திறன், ஆளுமை வெளிப்பாடும் புலப்படுத்தப்பட்டது.
கூத்தாற்றுகை அழகியலில் உண்மையானப் பண்பு வெளிப்பட்டது. சகபாடிகளுக்கு சொல்லிக் கொடுத்து பழக்கும் நிலையை அடைந்தனர். கொப்பியாசிரியர் செய்வதை திறன்பட செய்தல், கூத்தில் தளர்வு வரும் போது அதனைச் சுட்டிக்காட்டி ஆடிக்காட்டுதல், பாட்டை இராகத்துடன் பாடுவதற்கு வழிப்படுத்தல் ஆகியவற்றை செய்யுமளவிற்கு மாணவர்களுக்கு சுய ஆளுமை விருத்தி மேலோங்கியதை அவதானிக்க முடிந்தது. திட்டமிடலும் முகாமை செய்தலும் விரிவாகியது. மகிழ்ச்சிகரமான கற்றல் ஆற்றுகையை மையமாகக் கொண்டு இடம் பெற்றமை கூத்தரங்கில் சரியான விடயத்தைக் கற்க வழிஏற்பட்டது. பெண்கள் பெண் பாத்திரம் தாங்கி ஆடினர். பெண்கள் ஆண் பாத்திரம் தாங்கி ஆடும் ஆளுமைமைகளையும் வல்லபங்களையும் பெற்றனர். சாதனை படைத்தனர். முழுக்கூத்திலும் அதனை அவர்கள் வெளிப்படுத்தினர்.
இவ்வாறு ஆற்றுகை நிலை நின்று கூத்தை அதேவெளியில் கற்றல் கற்பித்தலினூடாக உருவானதே அலங்காரரூபன் தென்மோடிக்கூத்து. பல்கலைக்கழக கூத்து கற்றல் கற்பித்தல் வரலாற்றில் முதன்முதல் அதேசூழலில் அதிக நேரத்துடன் ஆடும் கூத்து 2015இல் ஆடப்பட்ட அலங்காரரூபன் தென்மோடிக் கூத்தாகும். நான்கு மணித்தியாலத்திற்கு இக்கூத்து கிழக்குப்பல்கலைக்கழக மைதானத்தில் களரி அமைத்து அரங்கேற்றப்பட்டது.
இரண்டாவது களரியேற்றம் மாமாங்க பிள்ளையார் ஆலயத்தில் பாரம்பரிய அரங்க விழாவில் அலங்கரிக்கப்பட்ட களரியல் நிகழ்த்தப்பட்டது. இதன் மூன்றாவது களரியேற்றம் சுவாமி விபுலானந்த அழகியற்கற்கை நிறுவகத்தில் உலக நாடக தின விழாவில் இடம்பெறுகின்றது. அலங்காரரூபன் தென்மோடிக் கூத்திற்கான அண்ணாவியார் வே.தம்பிமுத்தும், சபையோராக கு.பிரபாகரன், ப.கதிர்காமநாதன், சி.கேதீஸ்வரன், வி.கோடிஸ்வரன் ஆகியோர் செயற்பட்டனர். இக்கூத்து பழக்குவதற்கான கற்றல் கற்பித்தலுக்குமான பொறுப்பாசிரியராகவும் முன்னீடுகாராகவும் நுண்கலைத்துறையின் விரிவுரையாளர் சு.சந்திரகுமார் அவர்கள் செயற்பட்டார். இதற்கு பலவழிகளில் ஒத்துழைப்பு வளங்கியவர்கள் நுண்கலைத்துறையின் முன்னாள் தலைவர் கலாநிதி சி.ஜெயசங்கர் அவர்களும் தற்போதய தலைவரான கலாநிதி வ.இன்பமோன் அவர்களுமாவர்.
இக்கூத்தில் ஆடும் கூத்தர்கள்
1. கட்டியக்காரன் - அ.ரேணுஜன்
2. அதிவீரசூரன் - ந.கோகுலன்
3. அழகவல்லி - கு.ஞானவள்ளி
4. மந்திரி - தி.பிரதீபா
5. அலங்காரரூபன் - சு.சந்திரகுமார்
6. அதிவீரன் சேனாதிபதி - ச.சரண்யா
7. செகதனையாளி – சோ.ஞானசக்தி
8. செகதனையாளி மனைவி – கீ.இலக்கியா
9. அலங்காரரூபி – இ.பிரியா
10. செகதனையாளி சேனாதிபதி – த.ஜெயகாந்தன்
11. தூதுவர்கள், தலையாரிமார் - அ. ரேணுஜன், யோ. ரோகிலன்
12. விறகுத் தலையன் - ந. தர்சினி
13. செட்டி – வே.லோகுஜன்
14. முனிவர் - த.நவராணி
15. கள்ளன் - மோகனதாஸ்
16. தோழிமார் - சி.கிரிஜா, ச.அனுஜா
S.சந்திரகுமார்
விரிவுரையாளர்,
கிழக்கு பல்கலைக்கழகம்












