மண்முனை தென்மேற்கு கோட்ட தமிழ்மொழித்தின போட்டிகள் ஆரம்பம்

(படுவான் பாலகன்) மண்முனை தென்மேற்கு கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான தமிழ்மொழித்தின போட்டிகள் ஆரம்ப நிகழ்வு கொக்கட்டிச்சோலை இராமகிருஸ்ண மிசன் வித்தியாலயத்தின் மண்டபத்தில் இன்று(21) திங்கட்கிழமை இடம்பெற்றது.

பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள விபுலானந்தர் சிலைக்கு மண்முனை தென்மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன் மாலை அணிவித்ததை தொடர்ந்து ஆரம்ப நிகழ்வு மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது தமிழ்மொழி வாழ்த்து, தமிழ்மொழிதின வாழ்த்து போன்றனவும் பாடப்பட்டது. இங்கு பேச்சு, பாவோதல், நடனம், எழுத்தாக்கம் போன்ற பல்வேறு போட்டிகளும் இடம்பெறுகின்றன.

கோட்டக்கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மண்முனை தென்மேற்கு  உதவிக்கல்விப்பணிப்பாளர் த.குணசேகரம், உதவிக்கல்விப்பணிப்பாளர் ர.கருணாநிதி, ஆசிரிய ஆலோசகர் குகாநிதி, ஆசிரிய ஆலோசகர் பு.சதீஸ்குமார், நடுவர்கள், பாடசாலையின் அதிபர்கள், போட்டியில் பங்குபற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.