மட். மாவட்ட கால்பந்தாட்டச் சங்கத்தின் புதிய தலைவராக மா.உதயகுமார் அவர்கள் தெரிவு

மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்டச் சங்கத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம் கடந்த 20 ஆந் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் வேளையில் மட்.மெதடிஸ்த மத்திய கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நடப்பாண்டுக்கான புதிய நிருவாகம் தெரிவு செய்யப்பட்டது. 

இதில் புதிய தலைவராக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் திரு.மா.உதயகுமார் அவர்கள் அங்கத்துவக் கழகங்களின் உறுப்பினர்களது ஏகோபித்த ஆதரவுடன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த காலங்களில் மட்டக்களப்பின் வெபர் மைதானம் பயன்படுத்த முடியாத வகையில் நிருமாணப்பணிகள் நடைபெற்ற சூழலில் கால்பந்தாட்ட அபிவிருத்திக்காக திரு.மா.உதயகுமார் அவர்கள் பாட்டாளிபுரம் மைதானத்தை உருவாக்கி அதில் கால்பந்தாட்ட வீரர்கள் விளையாடுவதற்கு காரணமாக இருந்துள்ளார்.

இத்துடன் இவர் மட்டக்களப்பின் முன்னணி கால்பந்தாட்டக் கழகமாகத் திகழ்ந்த சுதந்திரன் விளையாட்டுக் கழகத்தின் கால்பந்தாட்ட வீரராக விளங்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தற்போது மாநகர சபையின் அலுவலர்களை உள்ளடக்கிய மாநகர பொழுது போக்கு அணியை மீளவும் உருவாக்கி கால்பந்தாட்ட வளர்ச்சியில் அக்கறை செலுத்தி வருகின்றார்.

இப்பின்னணியில் இவரது தலைமையில் மட்டக்களப்பின் கால்பந்தாட்டம் மேலும் பல அபிவிருத்திகளை அடையும் என கால்பந்தாட்ட நலன் விரும்பிகள் எதிர்பார்க்கின்றார்கள்.