காலம் கடந்தாவது, உண்மையை சரத்பொன்சேகா கூறியிருக்கின்றார்! இதற்கு நல்லாட்சி அரசு கூறும் பதில் என்ன?. கருணாகரம் கேள்வி

(சுகிவர்ணன்)
சர்வதேச பங்களிப்புடன் நடைபெறும் விசாரணை மூலம் போர்க்குற்றம் இழைத்தவர்களுக்கு உச்ச பட்ச தண்டனை வழங்க வேண்டும் எனவும் நாட்டின் உயர் சபையில் எமது மக்கள் பிரதிநிதிகள் இடித்துரைத்துள்ளார். நல்லாட்சி அரசின் அமைச்சர்  சரத் பொன்சேகாவின்  கூற்றுக்கும் அமைச்சரது கோரிக்கைக்கும் இந்த நல்லாட்சி அரசு கூறும் பதில் என்ன, இந்தப் பதிலை எமது நாடு மாத்திரமல்ல சர்வதேசமும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறது. என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்(ஜனா) தெரிவித்தார்.

மட்டக்களப்பு மண்டூரில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வென்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து பேசுகையில், பிரபாகரன் தொடர்பாக தமிழ் மக்கள் மத்தியில் நிலவும் சந்தேகத்தை சரத் பொன்சேகா தனது பாராளுமன்ற கன்னி உரையில் உறுதிப்படுத்தியுள்ளார்.
இது மட்டுமல்ல யுத்தம் முடிவுக்கு வந்த அண்மைய நாட்களில் யுத்தக் குற்றம் நடைபெற்றது என்பதையும் உறுதிப்படுத்தியுள்ள சரத் பொன்சேகா போர்க்குற்ற விசாரணையின் போது அதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த சர்வதேசததின் பங்களிபபு அவசியம் என்றும் கோரியுள்ளார்.
இவற்றை அவர், ஒரு பொதுக் கூட்டத்திலோ, மக்கள் சந்திப்பிலோ கூறவில்லை. நாட்டின் உயர் பீடமான நாடாளுமன்றத்தில் தனது கன்னி உரையில் கூறியுள்ளார்.

இதனைத்தான் நாங்கள் 2009 மே 19ஆம் திகதி தொடக்கம் கூறி வருகின்றோம். பல தடவைகள் எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திலும் கூறினார்கள். அவைகளையெல்லாம் கருத்திலோ கணக்கிலோ எடுக்கவில்லை.
ஆனால், இந்தக் கருத்தை நாடாளுமன்றத்தில் எடுத்துக் கூறியவர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களோ அல்லது குழுக்களின் பிரதித்தவிசாளரோ, எதிர்க்கட்சித் தலைவரோ அல்ல. யுத்தத்தை வழிநடத்திய இராணுவத்தளபதி, இராணுவ உயர் கௌரவமான பீல்ட் மார்சல் பட்டம் பெற்றவர், சிறிலங்கா ஜனநாயக சோசலிசக் குடியரசின் நாடாளுமன்ற உறுப்பினர், இவற்றை விட நல்லாட்சி அரசின் அமைச்சரவை அந்தஸ்து பெற்ற அமைச்சரான சரத் பொன்சேகா அவர்கள் தான் கூறியுள்ளார்.
போர்க்குற்றம் இழைத்தவர்களுக்கு உச்ச பட்ச தண்டனை வழங்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் எமது மக்கள் பிரதிநிதிகள் குரல் எழுப்பியுள்ளனர். நல்லாட்சி அரசின் அமைச்சரது கூற்றுக்கும் அமைச்சரது கோரிக்கைக்கும் இந்த நல்லாட்சி அரசு கூறும் பதில் என்ன, இந்தப் பதிலை எமது நாடு மாத்திரமல்ல சர்வதேசமும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறது. இதனை நல்லாட்சி அரசு உணர்ந்தால் சரி.

காலம் கடந்தாவது, உண்மையை உயர் சபையில்  பீல்டு மார்சல் சரத்பொன்சேகா கூறியிருக்கின்றார். இவரின் கூற்றுக்கு இன்றைய அரசு எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன?. பேரினவாதிகளின் கூற்றுக்கு நல்லாட்சி அரசு செவிசாய்த்து முள்னாள் தளபதியின் கருத்தைப் புறந்தள்ளப் போகிறதா அல்லது தக்க நடவடிக்கை எடுக்கப் போகின்றதா. எப்படியாயினும் சரக்கு மலிந்து சந்தைக்கு வந்துவிட்டது. இதுதான் இன்றைய ஜதார்த்தம். என தெரிவித்தார்.