வீதி விபத்தில் இளைஞன் ஒருவர் பலி!

(சுபஜன்)
மட்டக்களப்பு - செங்கலடி பதுளை பிரதான வீதியின் பன்குடாவெளி சந்தியில் இடம்பெற்ற வீதி விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  
குறித்த விபத்து நேற்று இரவு வேளையில் நடந்துள்ளதாக கூறியுள்ளனர்.

இந்த விபத்தில் நெல்லிப்போடியார் கிராமத்தைச் சேர்ந்த தங்கேஸ்வரன் கௌசிகன் (வயது 22) என்பவரே உயிரிழந்துள்ளார்.

மேலும் சம்பவம் பற்றித் தெரியவருவதாவது,

குறித்த நபர், நேற்று இரவு 7.30 மணியளவில் இலுப்படிச்சேனையிலுள்ள இறுவட்டு விற்பனை நிலையத்திற்கு திரைப்பட இறுவட்டை வாங்கிக் கொண்டு வீடு திரும்பும் போது, வழியில் பங்குடாவெளிச் சந்திக்கும், தளவாய் வீதிக்கும் இடைப்பட்ட பகுதியில் இருந்த பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்தவரை உடனடியாக செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்து வந்த போதும் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

பிரேத பரிசோதனைக்காக சடலம் இன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக மரணவிசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் தெரிவித்தார்.

சடலத்தை பார்வையிட பா.உ ச.வியாழேந்திரன் வைத்தியசாலைக்கு வருகை தந்திருந்தார்.

குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.