கட்டார் டோஹாவில் புலியின் நடமாட்டத்தால் மக்கள் அதிர்ச்சி

கட்டார் தலைநகர் டோஹாவில் தப்பிச் சென்ற புலியொன்று வாகன நெரிசலுக்கு மத்தியில் விதியில் நடமாடியதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வீதிக்கு மத்தியில் வெளியேறத் தடுமாறும் புலியின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூகதளங்களில் போடப்பட்டுள்ளன. இந்த புலியின் கழுத்தில் சங்கிலி கட்டப்பட்டிருக்கும் நிலையில் இது ஒருவரது செல்லப்பிராணியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.



எனினும் இந்த புலி மீண்டும் பிடிக்கப்பட்டு நான்கு பேர் அதனை லொறி வண்டியின் பின்புறமாக ஏற்றிக் கொண்டு சென்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புலி லொறி வண்டி ஒன்றின் பின்புற கதவால் கீழே விழுவது பேஸ்புக்கில் பதிவேற்றப்பட்டிருக்கும் வீடியோ ஒன்று காட்டுகிறது.

டுவிட்டரில் வெளியாகி இருக்கும் மற்றொரு வீடியோவில் கடும் வாகன நெரிசலுக்கு மத்தில் புலி ஒன்று கார் வண்டியை தாண்டி செல்வது பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றதாக டுவிட்டர் பயனர்கள் குறிப்பிட்டிருந்தபோதும் அது உறுதி செய்யப்படவில்லை. கட்டார் மற்றும் வளைகுடா நாடுகளில் இருக்கும் செல்வந்தர்கள் சிங்கம், புலி போன்ற அபாயகரமான மிருகங்களை செல்லப்பிராணிகளாக வளர்ப்பது வழமையாகியுள்ளது. இந்த நிலைமை தற்போது எல்லை மீறி இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.