அரச வங்கிகள் கடன் வழங்குவதில் உள்ள கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும் மட்டக்களப்பு அரசாங்க அதிபர்


(சிவம்)
அரச வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்குவதில் உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தி இலகுவாக கடன்களை வழங்கி மக்களின் வாழ்வாதரரத்தை உயர்த்துவதற்கான செயற்பாடுகளைச் செய்ய வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம். சாள்ஸ் தெரிவித்தார்.


இலங்கை வங்கியின் மித்துரு பக்மகா பொல -2016 புதுவருடச் சந்தை மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்தில் இன்று (08) அரச அதிபர் திறந்து வைத்து உரையாற்றும்போதே அவ்வாறு தெரிவித்தார்.

இதில் கலந்து கொண்டு அவர் மேலும் கூறுகையில்

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுனாமி, யுத்தம் போன்ற அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்வர்களுக்கு அரச வங்கிகள் வழங்கும் கடன் வசதிகளை விட தனியார் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் நுண்கடன் திட்டம் மூலம் வழங்கப்படும் கடன்கள் இலகுவாக வழங்கப்படுகின்றன. இதனால் பாரிய கடன் சுமைகளையும் அவர்கள் சுமக்க வேண்டியுள்ளது. அரச வங்கிகள் தங்களது கடன் வழங்கும் திட்டத்தில் உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தி எழிதாக கடன்களை வழங்கி பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற வேண்டும்


யுத்தத்தின் காரணமாக அதிக விதவைகளைக் கொண்டுள்ள இம்மாவட்டத்தில் சிறிய கைத்தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்தும் வாய்ப்புகள் அதிகரிக்கப்படவேண்டும் அதற்கு அனைத்து நிதி நிறுவனங்களும் உதவவேண்டும் என்றார்.


இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறிய, நடுத்தர மற்றும் பாரிய தொழில் முயற்சியாளர்களுக்கான கடன்களுக்கான காசோலைகள் வழங்கப்பட்டன. இச்சந்தை 8, 9,10 ஆம் திகதிகளில் காலை 9.00 மணிமுதல் மாலை 8.00 மணிவரை திறந்திருக்கும்.

இந்நிகழ்வில் இலங்கை வங்கியின் பிரரதிப் பொது முகாமையாளர் (கடன் அறவிடல்) கே.டி.இ. சுமணசிறி, உதவிப் பொது முகாமையாளர் (சந்தைப்படுத்தல்) கே.பி. ஆனந்த நடேசன், மத்திய வங்கியின் குழுத்தலைவர் சிறி பத்மநாதன், கிழக்கு மாகாண உதவிப் பொது முகாமையாளர் சிறில் பண்டார,  மற்றும் சிரேஷ்ட முகாமையாளர் எம்.ஐ. நௌபல் ஆகியோர் கலந்து கொண்டனர்.