மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள பாலர்சேனையில் புதிய பாடசாலை திறந்துவைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயப்பிரிவிலுள்ள பாலர்சேனை கிராமத்தில் காலசூரி வினாயகமூர்த்தி வித்தியாலயம் எனும் பெயருடன் புதிய பாடசாலை இன்று திங்கட்கிழமை(25) திறந்துவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு நகரிலிருந்தும்  மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்வி அலுவலகத்திலிருந்தும் மேற்கே சுமார் முப்பது கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது இப்பாடசாலை. கடந்த காலம் தொடக்கம் தற்பொழுதுவரை இப் பிரதேசத்தில் மாணவர்கள் இடைவிலகல் அதிகமாக காணப்பட்டதாலும், இங்குள்ள மாணவர்கல் சுமார் ஐந்து கிலோமீற்றர் வரை கால்நடையாக சிரமப்பட்டு வேறு பாடசாலைக்கு செல்வதாலும் இதனை நிவர்த்திசெய்யும் நோக்குடன் கல்வித்திணைக்கள அதிகாரிகளால் கடந்த 2014ஆம் ஆண்டு தொடக்கம் எடுக்கப்பட்ட முயற்சியின் பலனாக இன்று இப் பாடசாலை கிடைக்கப்பெற்றுள்ளது.

கடந்தகால யுத்தத்தினால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட இக்கிராம மக்களுக்கு இப்பாடசாலை அமைந்தது ஒரு வரப்பிரசாதமாகும்.

தற்காலிகமாக தகரத்தினால் அமைக்கப்பட்ட இப்பாடசாலை இன்று முதலாம்நாள் பதின்நான்கு மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது.

பாடசாலை அதிபர் எஸ்.துரைராஜா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் கே.சத்தியநாதன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இப் பாசாலையினை திறந்துவைத்தார்.

இதன்போது, கல்வி திணைக்கள அதிகாரிகள்,பொலீஸ் உத்தியோகத்தர்கள், அரச உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர்கள், அசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்

இப் பாடசாலை தற்போது எதுவித வசதிகளும் இல்லாமல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இம் மாவட்ட அரசியல் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் இதனை கருத்திற் கொண்டு தேவையான உதவிகளை பெற்றுக்கொடுக்குமாறு நாம் மக்கள் சார்பாக கோரிக்கை விடுக்கின்றோம்.