(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு (பட்டிப்பளை) பிரதேசத்தின் செயலாளராக ஒருவரை 05வருடங்களுக்காவது நியமித்து பிரதேசத்தை வழிநடத்தமுடியாத நிலை இருந்து கொண்டிருப்பதை அண்மைக்காலங்களாக அவதானிக்க கூடியதாகவிருக்கின்றது. திருமதி வாசுகி அருள்ராசா இப்பிரதேசத்தில் பிரதேச செயலாளராக இருந்து சென்று நான்கு வருடங்கள் கழிந்துள்ள நிலையில் இந்த நான்கு வருடங்களுக்குள் நான்கு பிரதேச செயலாளர்கள் இப்பிரதேசத்திற்கு நிமியக்கப்பட்டு பின்பு இடமாற்றம் வழங்கப்பட்டு சென்றுள்ள அவலநிலை இப்பிரதேசத்தில் இருந்து கொண்டிருக்கின்றது. வாசுகி அருள்ராசா பிரதேச செயலாளராக இருந்து சென்றதை தொடர்ந்து வ.தவராசா பிரதேச செயலாளராக தெரிவு செய்யப்பட்டு ஒரு மாதங்களே கடமைப்புரிந்து பின்பு இடமாற்றம் பெற்று சென்றிருந்தார். அதனை தொடர்ந்து திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டு மூன்று வருடங்கள் சேவையாற்றிய நிலையில் இடமாற்றப்பட்டார். பின்பு திருமதி சத்தியானந்தி நமசிவாயம் பிரதேச செயலாளராக பொறுப்பேற்று 10மாதங்கள் கடமையாற்றி இடமாற்றம் பெற்று சென்றுள்ளார். மீண்டும் புதிய செயலாளராக திருமதி தெட்ணகௌரி டினேஸ் பிரதேச செயலாளராக பொறுப்பேற்று ஓரிரு வாரங்கள் கடந்த நிலையில் மீண்டும் அவரையும் இங்கிருந்து இடமாற்றம் பெற்று தனது பழைய பிரதேச செயலகப்பிரிவிற்கு செல்லுமாறு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பிரதேச செயலாளர் ஒருவர் பிரதேசத்தை பொறுப்பேற்று சூழலையும், மக்களையும், உத்தியோகத்தர்களைப் பற்றியும் புரிந்து கொண்டு செயற்பட ஆரம்பிக்கும் நிலையில் இவ்வாறான இடமாற்றங்கள் வழங்கப்படுவதனால் இப்பிரதேசத்தில் பிரதேச செயலாளர்களின் கடமைகளை செய்ய முடியாத நிலை இருக்கின்றது. இதனால் ஏமாற்றப்படுவதும் இப்பிரதேசத்து மக்களாகவே இருந்து கொண்டிருக்கின்றனர். இன்று பிரதேச செயலாளரிடம் சென்று தங்கள் நிலைமை கூறிவிட்டு பின்பு மறுநாள் செல்லும் போது இன்னோர் பிரதேச செயலாளர் மீண்டும் அவருக்கு தங்கள் நிலைமைகளை தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. இதனால் எதனையும் பெற்றுக் கொள்ள முடியாத நிலையும் இப்பிரதேசத்து மக்களிடையே இருந்து கொண்டிருக்கின்றது.
நாட்டில் நல்லாட்சி அரசாங்கம் பொறுப்பேற்றுள்ளதாகவும் நல்லாட்சி நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிடும் தற்காலத்தில் ஒரு நல்லாட்சி அரசாங்கத்தால் நிலையாக சில வருடங்களுக்கு ஒரு பிரதேச செயலாளரை அப்பிரதேசத்தில் நியமிக்க முடியாதுள்ளதா? என்ற வினாக்களும் மக்கள் மத்தியில் எழுகின்றது. அதே நேரத்தில் இவ்வாறான பிரதேச செயலாளர் இடமாற்றங்கள் வேறு பிரதேசங்களிலும் நடைபெறுகின்றதா? ஏன் இப்பிரதேசத்தில் மாத்திரம் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. பிரதேசமக்களை ஏமாளிகளாக நினைக்கின்றார்களாக என்றும் சிந்திக்க தோன்றுவதாக பிரதேசத்தின் மக்கள் குறிப்பிடுகின்றனர்.
பிரதேச செயலாளர் இடமாற்றத்தில் அரசியல் பின்புலங்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றதாகவும் இதனால்தான் பிரதேச செயலாளர் நியமனங்களில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது. இதில் தமிழ் அரசியல்வாதிகளின் பின்புலமும் இடம்பெறுவதாகவும் இன்னோர்பக்கம் வெளிப்படுவது மிகவும் கவலைக்கிடமாகவே இருந்து கொண்டிருக்கின்றது. என்ன இலாபத்திற்காக பிரதேச செயலாளர் நியமனத்தில் அரசியல்வாதிகள் பங்கு வகிக்கின்றனர். என்றும் சந்தேகிக்க தோன்றுகின்றதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். மக்கள் அரசியல்வாதிகளை தெரிவு செய்வதானது வாக்களித்த மக்களுக்கு சேவையாற்றுவதற்காகவே அவ்வாறு சேவையாற்றுவதை விட்டுவிட்டு தமிழ் அதிகாரிகளின் நியமனத்தில் அரசியல்வாதிகள் சிலர் பங்கேற்பது ஏன்? மக்களுக்கு எத்தனையோ பிரச்சினைகள் உள்ள நிலையில் அவர்களை நேரடியாக சென்று பார்வையிடாமல் நிகழ்வுகள் நடத்தினால் மட்டும் நிகழ்வுக்கு சென்று மாலை அணிந்து அங்கு உரையாற்றினால் போதும் என்று நினைத்துக் கொண்டு அதுதான் அரசியல் என பல அரசியல் வாதிகள் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றனர். அரசியல் வாதிகள் மக்கள் மத்தியில் மங்காத இடம்பிடிக்க வேண்டுமாகவிருந்தால் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் மக்கள் அவர்களது சேவைகள் தொடர்பில் சொல்ல வேண்டும் தனிப்பட்ட இலாபங்களுக்காக நியமனங்களை அரசியலை பயன்படுத்தி மேற்கொள்வதானது மிகவும் வேதனையான விடயமே.
விவசாயத்தினையும், மந்தைவளர்பினையும் கூலித்தொழிலையும் நம்பி குடும்பத்தை வழிநடந்தும் இப்பிரதேசத்தில் எத்தனையோ மக்கள் வாழ்வாதாரத்திற்கு உதவி இல்லாதவர்களாகவும், கற்பதற்கு வசதியில்லாமலும், வீதிகள் உடைந்த நிலையிலும், தபால்நிலையம் மாவடிமுன்மாரி பிரதேசத்தில் அமைக்கப்பட வேண்டியும், யானைப்பிரச்சினைக்கு தீர்வு இல்லாமலும், பாடசாலைகளில் ஆசிரியர்கள் இன்றியும், அடிப்படை வசதிகள் இன்றியும் அன்றாடம் பல்வேறு பிரச்சினைகளையும் எதிர்கொண்டிருக்கின்ற நிலையில் இவை கண்களுக்கு தெரியாமல் அதிகாரிகளின் அவசியமற்ற நியமனங்களில் மாத்திரம் தலையீடுகளை மேற்கொள்வது ஏன்? எனவே இது தொடர்பில் பொறுப்புவாய்ந்த அதிகாரிகள், அரசியல்வாதிகள் உரிய கவனம் செலுத்தி மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் நிரந்தரமாக பிரதேச செயலாளரை பிரதேசத்தில் நியமித்து பிரதேசத்து மக்களுக்குரிய சேவை வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சுயலாபங்களை கைவிட்டு மக்களுக்காக செயற்படுவதே சாலச்சிறந்தது.












